தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை: தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஎப் ஆலையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை தொழில் பழகுநர் பயிற்சி முடித்த 17,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக வேலை வழங்க கோரி தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பயிற்சியாளர் சட்ட பிரிவு 22ன்படி தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. 2014ம் ஆண்டு பயிற்சியாளர் சட்ட பிரிவு 22ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் ஒவ்வொரு நிறுவனரும் தனது நிறுவனத்தில் பயிற்சி காலத்தை முடித்த எந்தவொரு பயிற்சி பெற்ற நபராக இருந்தாலும் நிறுவனத்தின் சொந்த கொள்கையின்படி பணி அமர்த்தலாம். இந்த சட்டத்தின்படி ரயில்வே வாரியத்தின் 20 சதவீத காலியிடங்களுக்கு ரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மற்றும் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து ரூ.5200-20,000 வரையிலான முதல்நிலை சம்பள விகிதத்தில் குறிப்பிட்ட பதவிகள் மற்றும் பிரிவுகளுக்கு நேரடியாக தேர்வு செய்யலாம்.

ரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு, தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் நடத்தும் முதல்நிலை தேர்வுக்கு பின் தயாரிக்கப்படும் இறுதி தகுதிப் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண்களை பெற உரிய வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயமாக நடத்தப்படும் முதல்நிலை பதவிகளுக்கான உடல் திறன் தேர்வில் இருந்து இவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளுக்கு இணங்க, 2023ம் ஆண்டில் தெற்கு ரயில்வேயில் பல்வேறு பதவிகளுக்கு தொழில் பழகுநர் பயிற்சி முடித்த 1100க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே தேர்வு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல், ரயில்வேயில் நேரடியாக நியமிக்க தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களிடமிருந்து பல கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் எந்தவொரு போட்டித் தேர்வும் இல்லாமல் இவர்களை நியமிக்க முடியாது. இது சட்டத்தை மீறும் செயல் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மீறுவதாகவும் இருக்கும்.

Related posts

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.73 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக அதிகரிப்பு

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடும் பணி தீவிரம்