மண்டபத்தில் நிர்வாகச் சிக்கல்களால் மூடல்; புதர்மண்டிக் கிடக்கும் சுற்றுலாத்துறை விடுதி

மண்டபம்: மண்டபத்தில் நிர்வாகச் சிக்கல்களால் மூடிக் கிடக்கும் சுற்றுலாத்துறை விடுதியை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள், உணவகம் அமைந்துள்ளது. தென் கடலோரத்தின் அருகில் இருக்கும் இந்த விடுதியில், ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் தங்கி வந்தனர். ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் வருவாய் ஈட்டித் தந்த விடுதி தற்போது நிர்வாகச் சிக்கல்களால் மூடிக் கிடக்கிறது. விடுதியின் வளாகம் பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டிக் கிடக்கிறது.

சமூக விரோதிகளின் கூடாரம்…
சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இந்த விடுதி 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. விடுதி வளாகத்தில் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டிக் கிடக்கிறது. சமூக விரோதிகள் மது அருந்தவும், சூதாட்டம் விளையாடும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு…

சுற்றுலாத் துறை விடுதியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், உணவகம் மற்றும் தங்கும் விடுதிகளில் வேலை செய்வதற்கு 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் தேவைப்படும். இதனால், மண்டபம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த விடுதி செயல்பட்ட காலங்களில் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வருவாய் கிடைத்ததாக கூறப்படுகிறது. தற்போது விடுதி மூடிக் கிடப்பதால் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, மூடிக் கிடக்கும் சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியை புதுப்பித்து திறக்க வேண்டும். கூடுதலாக தங்கும் அறைகள் கட்ட வேண்டும். விடுதி வளாகத்தில் சிறுவர்கள் விளையாட்டுத் திடம் அமைக்க வேண்டும். அருகில் கடல் இருப்பதால், இரவு நேரங்களில் குளிர்ந்த காற்றை அனுபவிக்கும் விதமாக இருக்கைகள் அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் விடுதியை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி

தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்