மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி, முதல்வரின் உத்தரவின்படி 11 சலுகைகள் அறிவிப்பு

சென்னை: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார். தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பொதுநல இயக்கங்களை சார்ந்த பிரதிநிதிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் பணியிழந்த தொழிலாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் வீடுகள், வாழ்வாதாரத்திற்கான உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மாஞ்சோலையிலுள்ள பிபிடிசி தேயிலை நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 99 ஆண்டு காலக்குத்தகை வரும் 2028ம் ஆண்டு பிப்.11ம் தேதி முடிவடைவதை கருத்திற்கொண்டு, மேற்படி நிறுவனம் மார்ச், 2024-ல் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 559 தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. அப்போதே, அரசு சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த் துறை, வனத்துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது.

அக்குழு, தொழிலாளர்கள் மற்றும் அங்குள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தது. மேலும் அவர்களை விருப்ப ஓய்வில் செல்ல நிறுவனம் கட்டாயப்படுத்தினால் தொழிலாளர் நலத்துறையில் புகார் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் ஓய்வு பெறவுள்ள 23 தொழிலாளர்களைத் தவிர்த்து, 536 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவர்களின் முழு சட்டப்பூர்வ பணப்பலன்கள் மற்றும் நிறுவனத்தால் விருப்ப ஓய்வுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கருணைத்தொகையில் 25 சதவீதம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டனர் என நிறுவனத்தின் சார்பில் தொழிலாளர் நலத்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தொழிலாளர்களுக்கு வாழ்வாதார வசதிகள் வழங்கும் பொருட்டு சிறப்பு குழுவால் விவரங்கள் சேகரிக்கப்பட்டதில், 389 குடும்பங்களை சார்ந்த 418 தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 266 நபர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும், 76 நபர்கள் தென்காசி மாவட்டத்திலும், 49 நபர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும், 18 நபர்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், 9 நபர்கள் பிற மாநிலங்களிலும் குடியேற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அதற்கான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

* கிராம பகுதிகளில் குடியேற விரும்பும் வீடற்ற தொழிலாளர்களுக்கு தற்போதைய அரசு விதிமுறைகளை தளர்வு செய்து சிறப்பினமாக கருதி அவர்களின் விருப்பத்தின் பேரில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும்.

* திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு தயார் நிலையிலுள்ள அம்பாசமுத்திரம் வட்டம், பாப்பாங்குளம் கிராமத்தில் 240 அடுக்கு மாடிவீடுகள் மற்றும் திருநெல்வேலி மாநகரம், ரெட்டியார்பட்டி பகுதியில் பணி முடிவடையும் நிலையிலுள்ள அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் விருப்பமுள்ள, ஏற்கனவே வீடு இல்லாத மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தொழிலாளர்களில், 55 வயதிற்குட்பட்ட பட்டியல் இனத்தை சார்ந்த வாழ்வாதார வசதி தேவைப்படும் தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் புதிய தொழில் தொடங்க 35 சதவீதம் மானியம் மற்றும் 6 சதவீதம் வட்டிச் சலுகையுடன் சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.

* இதர பிரிவுகளை சார்ந்த தொழிலாளர்களுக்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 சதவீதம் மானியம் மற்றும் 3 சதவீதம் வட்டி சலுகையுடன் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.

* தகுதியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill Development Corporation) மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மையம் (Tamil Nadu State Rural Livelihood Mission) மூலம் திறன் பயிற்சி வழங்கப்படும்.

* திறன் பயிற்சி முடிப்பவர்களுக்கு தனியார் துறையில் உரிய வேலைவாய்ப்பு பெற்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

* சிறிய பால் பண்ணைகள் அமைத்தல், கறவை மாடுகள், ஆடுகள் வாங்குதல் ஆகியவற்றிற்காக ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.

* பெண்களுக்கு மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் ரூ.1.50 லட்சம் வரை சிறு கடன்கள் வழங்கப்படும்.

* பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பும் அரசுப் பள்ளியில் அவர்களைச் சேர்க்கவும், அரசு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* தொழிலாளர்கள் குடியேற விரும்பும் முகவரிக்கு அவர்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை சிறப்பு முகாம்கள் மூலம் சிரமமின்றி மாற்றம் செய்து தரப்படும்.

* தொழிலாளர்களுக்கு நிறுவனம் வழங்க வேண்டிய மீதமுள்ள 75 சதவீதம் கருணைத் தொகை நீதிமன்ற உத்தரவுபடி வழங்கிடவும், அவர்களுக்கு விதிப்படி வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ பலன்களும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்திட தொழிலாளர் நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அவர்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளுமென நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்