மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம் ரூ.50 கோடி அடமானத்தை ரத்து செய்ய பதிவுத்துறை மறுப்பு

அம்பை: நெல்லை மாஞ்சோலை எஸ்டேட்டை அடமானம் வைத்து ரூ.50 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் அடமானத்தை ரத்து செய்ய பத்திரப்பதிவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம். சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 99 ஆண்டு கால குத்தகையாக 23 ஆயிரம் ஏக்கரை பெற்ற தேயிலை தோட்ட பிபிடிசி நிர்வாகத்தின் குத்தகை காலம், வரும் 2028ல் நிறைவு பெறுகிறது. இவை அனைத்தும் காப்புக்காடாக கடந்த 28.02.2018ல் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 2015ல் கல்லிடைக்குறிச்சி பதிவு அலுவலகத்தில் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள 8,373 ஏக்கர் 57 சென்ட் நிலத்தை மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஜமீனுக்கு சொந்தமானது என போலி ஆவணங்களை தயாரித்து, அடமான பத்திரமாக பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காப்புகாட்டை போலி ஆவணம் மூலம் அடமான பத்திரமாக பதிவு செய்த சார்பதிவாளர் சாந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு துணை போனதாக 2 பதிவுத்துறை அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற பிபிடிசி நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை அவர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என தடை விதித்தது. மேலும் மாஞ்சோலை தேயிலை தோட்ட அரசு நிலத்தை அடமானம் வைத்து ரூ.50 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் தோட்ட நிர்வாகம் இந்த அடமானத்தை ரத்து செய்ய கடந்த சில தினங்களுக்கு முன் முயற்சி மேற்கொண்டது,

ஆனால் பத்திரப்பதிவுத்துறை சட்ட விரோதமாக அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அடமானம் வைத்து பதிவு செய்ததாக 2 பத்திரப்பதிவு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு சர்ச்சையாகி இருப்பதால் கல்லிடைக்குறிச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அரசு நிலத்தை ஜமீன் சொத்துகள் என போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 25பேர் உயிரிழப்பு..!!

தொழிலதிபர் அம்பானி தனது வீட்டு திருமணத்திற்கு செலவு செய்தது மக்களின் பணம்: ராகுல்காந்தி பேச்சு

திருச்சி-பொன்மலை ரயில்வே குடியிருப்பு பகுதி மக்களுக்காக 2 சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும்: துரை வைகோ