மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்காக 1144 ஹெக்டேரில் 59.88 மில்லியன் டன் மண் எடுக்க திட்டம்…

*40 ஆண்டுகளுக்கு ஆலைக்கு மூலப்பொருள் கிடைக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தகவல்

* இந்த சுரங்க திட்டத்திற்கு எவ்வித நில கையகப்படுத்துதலும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஐஆர்இஎல் நிறுவனம் நில குத்தகை கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது.
* அதன்படி அகழ்விக்க தேவையான தனியார் பட்டா நிலங்கள், நில உரிமையாளர்களின் சுய விருப்பத்தின் பேரில் குத்தகை முறையில் பெறப்படும். குத்தகை காலம் 11 மாதங்கள் ஆகும்.

மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்காக கிள்ளியூர் தாலுகாவில் 1144 ஹெக்டேரில் மண் எடுக்க இருப்பதாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் இருக்கும் மோனசைட் உள்ளடக்கிய கனிம படிவத்தை அகழ்வு செய்வதற்கும், அதனை கையாள்வதற்கும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனமான ஐஆர்இஎல்க்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் ஐஆர்இஎல்ஆலை செயல்பட்டு வருகிறது.

நாட்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே 1970 முதல் இயங்கி வருகிறது. மோனசைட், சிர்கான் மற்றும் அதனுடன் காணப்படும் கனிமங்களை பிரித்தெடுத்து இந்திய அணுசக்தி துறை மற்றும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆலை ஆண்டுக்கு 1 லட்சத்து 14 ஆயிரத்து 600 டன் அணு கனிமங்களை உற்பத்தி செய்ய அனுமதியை பெற்று செயல்பட்டு வருகிறது.

நாட்டின் அணுசக்தி திட்டத்திற்கு தேவைப்படும் மிக முக்கிய கனிமங்களை எடுப்பதற்கு அணுசக்தி துறை கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது. அதன் மூலம் குமரி மாவட்டத்தில் மோனசைட் கனிமம் மிகுந்த பகுதியான 1144.0618 ஹெக்டேர் பரப்பிலான பகுதிகளை ஐஆர்இஎல் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசின் இசைவை கோரியது. தமிழ்நாடு அரசும் 2021ல் தனது இசைவை அளித்துள்ளது. அதனை தொடர்ந்து ஒன்றிய சுரங்க அமைச்சகம் 2021ல் அறிவிப்பாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஒன்றிய சுரங்க துறையின் முன் அனுமதி பெற்று சுரங்க குத்தகை வழங்குவதற்கான கடிதத்தை ஐஆர்இஎல்-க்கு அளித்துள்ளது.

இங்கு அணு கனிம படிவுகளான மோனசைட், சிர்கான், இல்மனைட், ரூட்டைல், சிலிமனைட் மற்றும் கார்னட் ஆகியவற்றை பிரித்து எடுக்க 1144.0618 ஹெக்டேர் பரப்பு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிள்ளியூர் தாலுகாவில் கீழ்மிடாலம் ஏ, மிடாலம் பி, இனயம்புத்தன்துறை, ஏழுதேசம் ஏ, பி, சி மற்றும் கொல்லங்கோடு ஏ மற்றும் பி கிராம பகுதிகளில் இந்த மண் எடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

இதன் மூலம் மேற்கொள்ளப்படும் அணு கனிம படிவுகள் உற்பத்தி அளவு 1.5 மில்லியன் டன்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையின் சுருக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு வரும் அக்டோபர் 1ம் தேதி பத்மநாபபுரம் ஆர்டிஒ அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் மொத்த சுரங்க குத்தகை பகுதி இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பகுதி ஏ மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து 8.4 கி.மீ தொலைவிலும், பகுதி பி 19.4 கி.மீ தொலைவிலும் உள்ளது. அகழ்விக்க தக்க கனிம படிமங்களின் உத்தேச மதிப்பீட்டின் அளவு 59.88 மில்லியன் டன்கள் ஆகும். இதில் அணு கனிமங்களின் அளவு 10 முதல் 22 சதவீதம் வரை உள்ளது. அதன் சராசரி அளவு 14.5 சதவீதம் ஆக உள்ளது. இந்த புதிய சுரங்க குத்தகை மூலம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன்கள் என்ற விகிதத்தில் 40 ஆண்டுகளுக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு தேவையான மூல பொருட்கள் கிடைக்கும்.

இந்த சுரங்க திட்டத்திற்கு எவ்வித நில கையகப்படுத்துதலும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஐஆர்இஎல் நிறுவனம் நில குத்தகை கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன்படி அகழ்விக்க தேவையான தனியார் பட்டா நிலங்கள், நில உரிமையாளர்களின் சுய விருப்பத்தின் பேரில் குத்தகை முறையில் பெறப்படும். குத்தகை காலம் 11 மாதங்கள் ஆகும்.

அகழ்விப்பு மற்றும் அகழ்விக்கப்பட்ட இடங்களை மீண்டும் நிரப்பும் மேம்பாட்டு பணிகளும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டு 11 மாதங்களில் அந்த நிலம் ஒப்பந்த குத்தகை மதிப்பீட்டு தொகையுடன் நில உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். இந்த திட்டத்திற்காக எந்த நில கையகப்படுத்தலும், நில வாங்குதலும் மேற்கொள்ளப்படாது. குத்தகை இடத்தில் உள்ள கட்டிடங்கள் மற்றும் நிலையான கட்டமைப்புகள் எதுவும் பாதிக்காது. சுரங்க பணிகளால் மறைமுகமான மக்கள் இடம்பெயர்வு எதுவும் ஏற்படாது. எனவே மறு சீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு போன்ற தேவைகள் இல்லை.
இயந்திரமயமாக்கப்பட்ட திறந்த நிலை மரபுசாரா அகழ்விப்பு முறையில் டிப்பர்களை பயன்படுத்தி துளையிடுதல் வெடித்தல் செயல்பாடுகள் ஏதுமின்றி அகழ்வு பணிகள் நடைபெறும். நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் வீதம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன் மண் அகழ்வு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கதிர் வீச்சு குறையும்
* 1144.0618 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சுரங்க குத்தகை பகுதி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில், மோனசைட் என்ற கனிமம் கடற்கரை தாது மணலில் இருப்பதனால், இயற்கை பின்புல கதிர்வீச்சின் அளவு 1-4 சீவர்ட் வரை இருக்கிறது.
* மோனசைட் என்பது, யுரேனியம் மற்றும் தோரியம் ஆகிய கதிர்வீச்சு கொண்ட கனிமமாகும். மோனசைட் உள்ளடக்கிய கனிமம் நிறைந்த தாது மணலை எடுத்துவிட்டு, கனிமங்கள் அற்ற மண்ணை அந்த இடத்தில் நிரப்புவதால், அந்த இடத்தின் இயற்கையான கதிர்வீச்சு அளவு 0.2 முதல் 0.4 சீவர்ட்டாக ஆக குறைக்கப்படுகிறது. அதாவது ஐஆர்இஎல் கனிமங்கள் நிறைந்த மண்ணை தோண்டி எடுத்துவிட்டு, கனிமங்கள் அற்ற மண்ணை இட்டு நிரப்பிய இடங்களில், இயற்கை கதிர் வீச்சானது 8 முதல் 10 மடங்கு வரை குறைக்கப்படுகிறது.
* மேலும், இந்நிறுவனத்தின் அணு கனிம படிமங்கள் எடுக்கப்படும் பணிகள், சுற்றுச்சூழலையோ, மக்களையோ பாதிக்காது. மேலும் அதிக கதிர் வீச்சிலிருந்து அப்பகுதியை விடுவிக்கிறது.

இரண்டு அடுக்காக எடுக்கப்படும்

* அணு கனிம படிமங்கள் அகழ்வு, இரண்டு அடுக்கு செயல்பாடுகளாக இருக்கும். அணு கனிம படிமங்கள் நிலத்தில் மேற்பரப்பில் அமைந்துள்ளது. முதலில் நில மேற்பரப்பில் இருந்து 2.5 முதல் 3 மீட்டர் ஆழம் வரையில் அகழ்வு பணிகள் நடத்தப்படும்.
* அடுத்தகட்டமாக அடுத்த அடுக்கு அகழ்விக்கப்படும். 2வது அகழ்விப்பு முடிக்கும்போது கனிம பிரிவு ஆலையில் இருந்து கொண்டுவரப்படும் நிராகரிக்கப்பட்ட அணு கனிமங்கள் இல்லாத மண்ணைக்கொண்டு பள்ளங்கள் நிரப்பப்படும்.
* அகழ்விப்பு சராசரி 6 மீட்டர் நீளம் ஆழம் வரையிலும், அதிகபட்சம் 9 மீட்டர் ஆழம் வரையிலும் இருக்கும். நிலத்தடி நீர்மட்டம் நில மட்டத்திற்கு 10 முதல் 15 மீட்டர் ஆழத்தில் உள்ளதால் அகழ்விப்பு பணிகள் நிலத்தடி நீர்மட்டத்தில் குறுக்கிடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.31.25 கோடி திட்ட மதிப்பீடு

இந்த திட்ட செயல்பாட்டின் மூலம் நேரடியாக சுமார் 155 நபர்களும் மறைமுகமாக 250 நபர்களும் வேலைவாய்ப்பு பெறுவர். இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.31.25 கோடி ஆகும். சுற்றுவட்டாரப் பகுதியில் நிறுவன சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்காக ஐஆர்இஎல் நிறுவனம் ஆண்டிற்கு சுமார் ரூ.3 முதல் ரூ.5 கோடி செலவிடுகிறது.

Related posts

புதுக்கோட்டை அருகே கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வேதனை!

உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக தகவல்