மகிழ்ச்சியான பள்ளி நாட்களுக்கு மனநல ஆலோசனைகள்!

ஜூன் 10 பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு தமிழ் நாடு முழுக்க எங்கும் சீருடைகள் சகிதமாக குழந்தைகள் செல்வதைக் காண முடிகிறது. ஒரு மாதத்திற்கும் மேல் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு என்பது நிச்சயம் பல குழந்தைகளுக்கு வருத்தமாகவும், முதல் முறை பள்ளிக்குச் செல்லும் பிரைமரி பள்ளிக் குழந்தைகளுக்கு அழுத்தமாகவும் இருக்கும். இதைக் காட்டிலும் பெற்றோர்களுக்கும் அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும். இந்த ஒருவாரம் பல பள்ளிகளில் விளையாட்டு, கலந்துரையாடல், என நகர்ந்திருந்தாலும் இதே போல் தொடர்ந்து இருப்பதும் கடினம். எனவே வகுப்புகள், வீட்டுப்பாடங்கள், டியூஷன்கள் என துவங்க இருக்கும் பரபரப்பான சூழலை மன ரீதியாகவும், மகிழ்ச்சியாகவும் அணுகுவது எப்படி. ஆலோசனைகள் கொடுக்கிறார் மருத்துவ உளவியலாளர் டாக்டர் எஸ்.வந்தனா.

‘எக்காலத்திலும் பேசப்பட வேண்டிய, தேவையான விஷயம் இந்த பள்ளிகளுக்கும், குழந்தைகளுக்குமான பந்தம். பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைப் பிடிக்காத ஒன்றாகத்தான் அணுகுகிறார்கள் எனில் இன்னும் பள்ளிகளில் மாற்றம் பெற வேண்டிய சூழல் இருக்கத்தான் செய்கிறது. பள்ளிகள் எப்போது திறக்கும் என பெற்றோர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு குழந்தைகளிடம் பார்ப்பது அரிதே. குறிப்பாக இதற்கு அங்கே அமையும் நண்பர்களின் சூழலும் மிக முக்கியம். வீட்டில் இருப்பதை விட சுவாரஸ்யமான மனநிலையைக் கொடுக்கும் பட்சத்தில் நிச்சயம் குழந்தைகள் பள்ளிகளுக்கு வர ஆசைப்படுவார்கள். ஏன் வளர்ந்த மனிதர்களான நாம் எல்லோருமே பள்ளிக் காலங்களைத்தான் பசுமையான காலங்களாக எக்காலத்திலும் ஞாபகத்தில் வைத்திருந்து சொல்வோம். என்கையில் பள்ளிக்குச் செல்லும் காலத்திலேயே அதன் அருமையை உணர்த்தி, அவர்களை மகிழ்வாக அனுப்ப வேண்டியதில் முக்கியப் பங்கு பெற்றோர்களுக்குத்தான் இருக்கிறது’ என்னும் டாக்டர் எஸ். வந்தனா இரண்டு வகையான குழந்தைகள் அவர்களின் மனநிலைக்கு ஏற்ப ஆலோசனைகள் பகிர்ந்தார்.

‘ஒன்று ஏற்கனவே பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் குழந்தைகள், மற்றொன்று முதல் முறையாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள். பெரும்பாலும் வீட்டில் இருக்கும்போது மொபைல், டிவி, அதிக விளையாட்டு, நினைத்தது கிடைக்கும் சூழலில் இருக்கும் குழந்தைகள்தான் பள்ளிக்குச் செல்வதை விரும்பாத சூழலாகவும், இன்னும் கொஞ்சம் அதிகம் விடுமுறை கிடைத்திருக்கலாம் என்கிற மனநிலையிலும் இருப்பதைக் காண முடிகிறது. விடுமுறையானாலும் மொத்தமாக அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடாமல் கோடைகால பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், பொது அறிவு, பெரியவர்களின் அறிவுரைகள், பெற்றோர்களின் வீட்டு வேலைகளில் உதவிகள் என சரிசமமாக அவர்களுக்குக் கொடுக்கும் போது பள்ளியின் சூழலுக்கும், வீட்டின் சூழலுக்கும் பெரிய வித்யாசம் இருக்காது. இதனால் பள்ளி திறக்கும்போது அவர்களே சந்தோஷமாகக் கிளம்புவார்கள். பிரைமரி குழந்தைகள் வேறு வழியே இல்லை, அவர்கள் பெற்றோர்களின் கைக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தவர்கள், பள்ளியில் சேர்க்கும் போது அவர்கள் அழுவதையும், பிரிவதையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் சிறுவயது முதலே பள்ளி என்றால் சந்தோஷம், நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள், விளையாட்டு இருக்கும், புது உடைகள், பைகள், பேக் இதெல்லாம் கிடைக்கும் என்னும் நேர்மறையான மனநிலையைக் கொடுத்துக்கொண்டிருந்தாலே பிரைமரி குழந்தைகளும் பள்ளிகள் மேல் ஆர்வம் காட்டுவார்கள்’ பள்ளிகள் என்ன செய்ய வேண்டும் மேலும் தொடர்ந்தார் எஸ். வந்தனா.

‘சமூக அறிவியல் அல்லது தத்துவங்கள் (Moral Science)… இப்போதெல்லாம் பல பள்ளிகளில் இந்த வகுப்பே இல்லை. ஒரு சில கல்லூரிகள், பள்ளிகளில் மதிப்புக் கல்வி (Value Education) என்கிற பெயரில் இந்த வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதாவது வாழ்க்கைக்குரிய முதுமொழிகள் அல்லது தத்துவங்கள்(Proverb) குறித்தபாடங்கள். தினம் ஒரு குழந்தை வீதம் அவர்கள் பெற்றோர்களிடம் ஏதேனும் முதுமொழி தெரிந்துகொண்டு வரச் செய்து அதற்குரிய கதைகள் , கலந்துரையாடல்கள் கொடுக்கலாம். இதனால் குழந்தைகள், பள்ளிக்கூடம், பெற்றோர்கள் மூவருக்கும் இடையே ஒரு தொடர்பு உண்டாகும். ஒவ்வொரு குழந்தையும் ஒரு வகை. ஒருவழிக் கல்வி முறையான கரும்பலகை, புத்தகம் கொண்டு எடுக்கப்படும் வகுப்புகள் என்பது பெரும்பாலும் எல்லா குழந்தைகளுக்கும் மனதில் ஏறாது. சில நேரங்களில் வகுப்பெடுக்கும் முறைகளை மாற்றலாம். ஒரு நாள் இரு குழுவாக பிரித்து அவர்களுக்குள்ளேயே தீர்வுகளைக் காணசெய்தல். பாடங்களை கதைகள் வழியாக சொல்லிக் கொடுத்தல் முறைகளைக் கையாளலாம். எப்படி இன்று வகுப்பை ஆரம்பிக்கலாம்? என குழந்தைகளிடமே கேட்டு அவர்கள் சொல்லும் ஆலோசனைகளைப்பரிசீலித்தால் இன்னும் குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். பொதுவாகவே பள்ளிகள் திறந்தவுடன் வகுப்புகள், பாடத்திட்டங்கள் என இயந்திரம் போல் ஆரம்பிக்காமல் ஒரிரு நாட்கள் அவர்களை தயார்படுத்தி, கோடை விடுமுறை குறித்த கலந்துரையாடல்கள், சில விளையாட்டுகள், வார்த்தை புதிர்கள் எனக் கொடுத்து ஆரம்பித்தால் அத்தனைக் குழந்தைகளும் பள்ளிகளுக்கு வர ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோர்களும் காலை வேளையில் உண்டாகும் நேரப் பரபரப்பைக் கத்தி, சண்டையிட்டு, திட்டி அழுத்தமான சூழலாக மாற்றாமல், பொறுமையாக சீக்கிரம் எழுந்து அவர்களை பள்ளிகளுக்குத் தயார்படுத்துவதும் மிக அவசியம்.
– ஷாலினி நியூட்டன்.

Related posts

திருப்போரூர் பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி, நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வங்காளதேசத்தை சேர்ந்த கணைய புற்றுநோயாளிக்கு எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டில் மஞ்சள் காமாலைக்கு நவீன சிகிச்சை

திருப்போரூர் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு