மானாமதுரையில் மரத்தில் கட்டி வைத்து தாக்கியதில் வாலிபர் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

மானாமதுரை: மானாமதுரையில் வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கையில் உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரஷாந்த் (29). எலக்ட்ரீஷியன். இவருக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த அக்.9ம் தேதி மானாமதுரையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற அவர், மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே கீழமேல்குடி சாலையில் மது அருந்திவிட்டு நின்றுள்ளார்.

அவரை திருட வந்ததாக நினைத்து லாரி ஓட்டுநர் உட்பட 5 பேர் மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் பிரஷாந்தை மீட்டபோது மது போதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது மைத்துனர் சரவணக்குமாரை வரவழைத்து அவருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், வீட்டிற்கு சென்ற அவர் இரண்டு நாட்கள் கழித்து வயிறு வலிப்பதாக கூறியதும், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது மூச்சுச்திணறல் ஏற்பட்டு சிறுநீர்பாதையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றுள்ளார். தீவிர சிகிச்சையளித்தும் பிரஷாந்த் நேற்று இறந்தார்.

பிரஷாந்தை மரத்தில் கட்டி வைத்து தாக்குவது போல வீடியோக்கள் வலைதளத்தில் வந்ததை பார்த்து அதிர்ந்த உறவினர்கள் அவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சிவகங்கை மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். உடலை சிவகங்கை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என மாவட்ட எஸ்பி அரவிந்த் இடம் வலியுறுத்திய உறவினர்கள் வேறு மாவட்ட மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதனை வீடியோவாக எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனால் மானாமதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தேகமான முறையில் மரணம் அடைந்ததாக மானாமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்; நெடுந்தூர சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரிக்கு வருமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை

சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு