மணலி துணை மின்நிலையத்தில் தீ விபத்து போர்க்கால நடவடிக்கையால் சென்னையில் 100 சதவீத மின்விநியோகம் சீரமைப்பு

சென்னை: சென்னையில் மின்தடை ஏற்பட்டது குறித்து மின்வாரியத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னை மணலி துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு பிரத்யேகமாக அலமாதி மற்றும் NCTPS-2 என 2 மின்னூட்டி ஆதாரங்கள் உள்ளன. இவற்றில், ஏதேனும் ஒரு மின் பாதையில் பழுது ஏற்பட்டாலும் அடுத்துள்ள மின்னூட்டி ஆதாரம் வழியாக இத்துணை மின் நிலையத்திற்கு 100%மின்சாரம் பெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. இதன் வழியாக மின்சாரத்தை பெற்று சுமார் 800 முதல் 900 மெகாவாட் அளவிலான மின்சாரத்தினை சென்னையின் முக்கிய துணை மின் நிலையங்களான புளியந்தோப்பு, மணலி, தண்டையார்பேட்டை, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி மற்றும் செம்பியம் ஆகியவற்றின் வாயிலாக, சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு 9.50 மணி அளவில், மணலி துணைமின் நிலையத்தின் மின்சாரம் வழங்கும் 2 மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்தபோதும், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்து, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS-2 ) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது. இதையடுத்து துரித நடவடிக்கை எடுத்து, தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

இதனிடையே, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்கி மாற்றுவழியில் மின்சாரம் விநியோகம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கிவிட்டு, மாற்று வழியில் மின்சாரத்தை மீட்டு எடுக்கும் பணிகள் இரவு 11 மணி அளவில் தொடங்கப்பட்டு, நள்ளிரவு 12 மணி அளவில் படிப்படியாக 100 சதவீத மின்சாரம் சீரமைக்கப்பட்டது. மேலும், இந்த மின்தடை காரணமாக சென்னையில் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related posts

திருவள்ளூரில் வெவ்வேறு இடங்களில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது: 2 டன் 150 கிலோ பறிமுதல்

தவறான சிகிச்சை; மாணவன் பலி போலி பெண் மருத்துவர் கைது

துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விஏஓ, தாசில்தாரை மிரட்டியதால் கைது போலி பெண் ஐஏஎஸ் அதிகாரி பாஜ நிர்வாகி சிறையில் அடைப்பு: ஜோடியாக தில்லாலங்கடி வேலை