மணலி மார்க்கெட் சந்திப்பில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 21வது வார்டுக்கு உட்பட்ட பாடசாலை தெருவில் ரூ.2.64 கோடி செலவில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற முடிவு செய்த மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினருடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டனர்.

பின்னர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு, தாங்களாகவே அகற்றிக் கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி மணலி மண்டல அதிகாரிகள், மணலி பாடசாலை தெரு மார்க்கெட் சந்திப்பில் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் இந்திரங்கள் மூலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தை நாடியதால், ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்த விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்பேரில், மணலி பாடசாலையில் பாதியில் நிறுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.

மண்டல குழு தலைவர் ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் 2 பொக்லைன் இந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை முழுமையாக அகற்றினர்.  மீட்கப்பட்ட இடத்தில் மழைநீர் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கப்படும் என்றும், எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகளையும் படிப்படியாக அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது