மணலி மண்டலம் 16 வது வார்டில் ₹6.66 கோடியில் சாலை அமைப்பு: கவுன்சிலர் ராஜேந்திரன் ஆய்வு

திருவொற்றியூர்: சென்னை மணலி மண்டலம் 16வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மணலி புதுநகர், எலந்தனூர் மற்றும் சடையங்குப்பம், பர்மாநகர், ஆண்டார்குப்பம், கன்னியம்மன்பேட்டை, கடப்பாக்கம் பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முறையாக பராமரிக்கப்படாததால் குண்டும், குழியுமாக வாகனங்கள் ஓட்ட முடியாத நிலைமை காணப்பட்டது. இதன்காரணமாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமப்பட்டனர்.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர் ராஜேந்திரன், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தார். இதையடுத்து 22-23, 23-24ம் நிதி ஆண்டுகளின் கீழ் மற்றும் சிங்காரச் சென்னை, நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம், மாநில அரசு நிதி குழு ஆகியவற்றின் மூலம் ரூ.6.66 கோடி செலவில் 13.44 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் பிரதீப்குமார், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் சுரேஷ் ஆகியோர் இணைந்து சாலை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை சுமார் 6.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவுன்சிலர் ராஜேந்திரன் கூறுகையில், ‘’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் அனைத்து சாலைகளும் தரமாக போடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும். சாலை பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றனர்.

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்