மண்ணடி பகுதியில் 11 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: 3 நிறுவனம் மீது போலீசில் புகார்

தண்டையார்பேட்டை: மண்ணடி பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக சென்னை கலெக்டருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அவரது அறிவுறுத்தலின் பேரில், உதவி தொழிலாளர் ஆணைய அமலாக்க அதிகாரி ஜெயலட்சுமி, வடக்கு கோட்டாட்சியர் ரங்கராஜ், புரசைவாக்கம் தாசில்தார் சரவணகுமார் ஆகியோர் கூட்டாக மண்ணடி பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வெங்கட மேஸ்திரி தெரு, மூக்கர் நல்லமுத்து தெரு, மீரான் லெப்பை தெரு ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த 3 பேக் தயாரிக்கும் நிறுவனத்தில் 11 குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

12 வயது முதல் 17 வயது வரை உள்ள 11 குழந்தைகளை குறைந்த ஊதியத்தில் 12 மணி நேரத்துக்கு மேலாக வேலை வாங்கி அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதில் 11 சிறுவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள். ஒரு சிறுவன் நேபாளத்தைச் சேர்ந்தவன். இவர்களுடைய பெற்றோர்களுக்கு குறைந்த அளவு பணத்தை கொடுத்து விட்டு, அங்கிருந்து சிறுவர்களை அழைத்து வந்து, அவர்களிடம் கடின வேலை வாங்கி வந்ததும் தெரிய வந்தது.
இதில் மீட்கப்பட்ட 11 குழந்தைகளும் ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேக் தயாரிக்கும் நிறுவனம் மீது எஸ்பினேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்

நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !