மம்தாவுடன் சவுரவ் கங்குலி சந்திப்பு திரிணாமுல் காங்கிரசில் இணைகிறாரா?

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சவுரவ் கங்குலி நேரில் சந்தித்தார். இதனால் அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நபன்னாவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இதனால் அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைய உள்ளார் என அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் நடந்த இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடந்தாண்டு செப்டம்பரில், முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்காக மம்தா பானர்ஜியுடன் சவுரவ் கங்குலி ஸ்பெயினுக்கு சென்றிருந்தார். அப்போது, அவர், திரிணாமுல் காங்கிரசில் சேரக்கூடும் என்று யூகங்கள் எழுந்தன. அவற்றை கங்குலி மறுத்தார்.

அப்போது அவர், நான் எம்எல்ஏ, எம்பி அல்ல, சாதாரண மனிதன். எனக்கு அரசியலில் பற்று இல்லை’ என்றார்.அதற்கு பிறகு கடந்த மாதம் பெங்கால் பாஜ தலைவர் சுகந்த் மஜும்தாரை சவுரவ் கங்குலி சந்தித்தார். இந்த சந்திப்பு சால்ட் லேக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்தது. அதாவது சந்தேஷ்காலி பிரச்னைக்கு எதிரான பாஜவின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியபோது சுகந்த் மஜும்தார் காயமடைந்தார். இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதே மருத்துவமனையில்தான் சவுரவ் கங்குலியின் தாயும் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்க்க வந்த சவுரவ், சுகந்த் மஜூம்தாரையும் சந்தித்தார். மேலும் கடந்த 2022ம் ஆண்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொல்கத்தாவில் உள்ள சவுரவ் கங்குலியின் இல்லத்திற்கு வந்தபோதும், பாஜவில் கங்குலி சேரக்கூடும் என்று வதந்திகள் வந்தது. அதே போன்றுதான் தற்போது மம்தாவை சவுரவ் கங்குலி சந்தித்துள்ளார் என தெரிகிறது. அதனால் அவர் கட்சியில் இணைவார் என்பது சந்தேகம்தான்.

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!