மாமல்லபுரம் இசிஆர் சாலையில் எரியாத மின்விளக்குகளால் வாகன விபத்து அபாயம்: சீரமைக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் இரவு நேரங்களில் சரிவர மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதியில் வாகன விபத்துகள் அதிகரிக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பழுதான மின்விளக்குகளை உடனடியாக சீரமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து திருவிடந்தை வரை செல்லும் இசிஆர் சாலையின் சென்டர்மீடியனில் உள்ள மின்கம்பங்களில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில், இரவை பகலாக்கும் வகையில் 65க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. அதேபோல், மாமல்லபுரம் நுழைவுபகுதி முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பெட்ரோல் பங்க் வரையுள்ள மின்கம்பங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை மின்விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. இதனால் அவ்வழியே இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது.

எனினும், மாமல்லபுரம் இசிஆர் சாலையில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் அனைத்து மின்விளக்குகளும் சரிவர எரிவதில்லை. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்திருப்பதால், அங்கு அதிகளவில் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அப்பகுதிகளில் இரவு நேரங்களில் தனியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளிடம் வழிப்பறி, செயின் மற்றும் செல்போன் பறிப்பு உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால் மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே, மாமல்லபுரம் இசிஆர் சாலையில் பழுதான மின்விளக்குகளை உடனடியாக சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்