மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் தேசிய அலைச்சறுக்கு போட்டி தொடக்கம்: 100 வீரர்கள் பங்கேற்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 100 அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்கின்றனர். மாமல்லபுரம் சுற்றுலா தளம் சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்கி வருகிறது. இங்குள்ள புராதன நினைவு சின்னங்களை கண்டு ரசிக்க தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாவாசிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு, கடந்த 2022ம் ஆண்டு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்தது. இதில், 186 நாடுகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, காற்றாடி திருவிழா, சர்வதேச அலைச்சறுக்கு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு, ஜி20 கூட்டங்களும் நடந்தது. இதனால், உலக நாடுகளிடையே மாமல்லபுரம் சிறப்பிடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அலைச்சறுக்கு விளையாட்டு சங்கம், இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு சார்பில் ‘‘மகாப்ஸ் பாயின்ட் பிரேக் சேலஞ்ச்’’ என்ற பெயரில் 2 நாள் நடக்கும் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி நேற்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு அருகே தொடங்கியது. இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட அலைச்சறுக்கு வீரர்கள், வீராங்கனைகள் சீறி வரும் கடல் அலையில் அலைச்சறுக்கு பலகை மூலம் சாகசங்களை நிகழ்த்தி அசத்தினர். இதனை ஏராளமான சுற்றுலாவாசிகள் கண்டு ரசித்தனர். இப்போட்டியில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதன் மூலமாக இந்தியா சார்பில், சர்வதேச போட்டியில் பங்கேற்க 10 வீரர்கள், 5 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது