மாமல்லபுரத்தில் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்: அசத்திய நாட்டுப்புற கலைஞர்கள்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. இதில், நாட்டுப்புற கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தினர். உலகம் முழுவதும் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக ஐநா சபை கடந்த 1970ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. இதை தொடர்ந்து, ஆண்டுதோறும் அந்த நாளில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்பேரில், உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இதில், செங்கல்பட்டு சப்-கலெக்டர் லட்சுமிபதி கடற்கரையை சுத்தம் செய்யும் தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து, கடற்கரை கோயில் அருகே மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி மாணவர்கள், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட சுற்றுலா விழிப்புணர்வு பேரணியையும் சப்-கலெக்டர் லட்சுமிபதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேரணி கடற்கரை சாலை, தென் மாட வீதி, அர்ஜூனன் தபசு, பள்ளிக்கூட சாலை, கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை வழியாக வந்து தனியார் ரிசார்ட்டில் நிறைவு பெற்றது.

இதையடுத்து, மயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, பரத நாட்டியம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சுற்றுலா தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், சுற்றுலா அலுவலர் சக்திவேல், பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், கவுன்சிலர் மோகன் குமார், இந்திய சுற்றுலா தகவல் அலுவலர் முரளி, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாமல்லபுரம் வந்த வெளிநாட்டு பயணிகளை தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி மாலை போட்டு, நெற்றியில் குங்குமமிட்டு வரவேற்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை