மாமல்லபுரம் மரகத பூங்காவில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் மின் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி தொடக்கம்: சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மரகத பூங்காவில் ரூ.8 கோடி மதிப்பீட்டில், 10 லட்சம் மின் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னைக்கு அருகே 60 கிமீ தூரத்தில் இசிஆர் சாலையையொட்டி, மாமல்லபுரம் சுற்றுலா தலம் உள்ளது. இது, உலக அளவில் புகழ் வாய்ந்த சுற்றுலா தலமாக பார்க்கப்படுகிறது. இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் இங்குள்ள பாறைகளில் வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜூனன் தபசு, பஞ்ச பாண்டவர்கள் மண்டபம், கிருஷ்ண மண்டபம், ஐந்து ரதம், கடற்கரை கோயில், புலிக்குகை, வராக மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், ராமானுஜர் மண்டபம், திருமூர்த்தி மண்டபம், கோனேரி மண்டபம், முகுந்தராயர் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் மற்றும் குகைக் கோயில்களை அழகுர செதுக்கினர்.

இந்த, சிற்பங்கள் உலகம் போற்றும் வகையில் கம்பீரமாக நின்று பயணிகளுக்கு காட்சி தருகிறது. இங்குள்ள, சிற்பங்களை கண்டு ரசிக்கவும், கடற்கரையில் கால் நனைக்கவும், இங்கு கடற்கரைக்கு செல்லும் வழியில் விற்கப்படும் வறுத்த மீன்களை ருசி பார்க்கவும் அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் என ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 6 மாதங்கள் சீசன் காலம் என்பதால் லட்சக்கணக்கான வெளிநாட்டு பயணிகள் வருவார்கள். அப்படி, வரும் பயணிகள் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறையை சுலபமாக சுற்றிப் பார்க்கின்றனர். பேருந்து, நிலையத்தில் இருந்து கடற்கரை கோவில் 500 மீட்டர் தொலைவிலும், ஐந்து ரதம் 1 கிமீ தொலைவிலும் உள்ளதால், நடந்து செல்ல பயணிகள் சிரமப்பட்டனர்.

இதனால், பயணிகளின் சிரமத்தை குறைத்து, அமர்ந்து ஓய்வு எடுத்து செல்லும் வகையில், கடந்த 2009ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பழைய சிற்பக் கல்லூரிக்கு எதிரே மரகத பூங்க ஏற்படுத்தப்பட்டு, அங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த மேடை, பயணிகள் ஓய்வு எடுக்க இருக்கைகள், மின் விளக்குகள், பசுமை புல்வெளி, நடைபாதை, மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டது. கடந்த, 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையொட்டி மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கி, செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு மரகத பூங்காவை அழகுபடுத்தியது.

சில, மாதங்கள் மட்டும் பேரூராட்சி வசம் மரகத பூங்கா இருந்தது. பின்னர், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ.8 கோடி மதிப்பில் மேம்படுத்தவும், நுழைவு பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் மூங்கில் உணவக குடில், எல்இடி விளக்குகளை கொண்டு பிரமாண்ட ஒளிரும் தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்காமல் பெயரளவுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்வதாக கூறி, காலையில் மட்டும் அரை மணி நேரம் திறந்தும், மற்ற நேரங்களில் பூட்டு போட்டு பூட்டியே சீரழிந்து காணப்பட்டது.

இதை, பயன்படுத்தி பகல் மற்றும் இரவு நேரங்களில் குடிமகன்கள் மதில் சுவரை எகிரி குதித்து உள்ளே சென்று, மது அருந்தி விட்டு, போதை தலைக்கு ஏறியதும் பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும், காதல் ஜோடிகளும் அங்கு அத்துமீறி தாகாத செயல்களில ஈடுபட்டனர். இதனால், மாமல்லபுரம் சுற்றுலா வரும் பயணிகள் வெயிலில் நடந்து வந்து அமர்ந்து ஓய்வு எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். மாமல்லபுரம் மரகத பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்குக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சுற்றுலாத்துறைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து, உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையிலும், வெளிநாட்டு பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், மாமல்லபுரம் பழைய சிற்பக் கல்லூரி சாலையில் உள்ள மரகத பூங்காவில் சுற்றுலாத் துறையுடன் இணைந்து தனியார் மற்றும் பொதுப் பங்களிப்புடன் ரூ.8 கோடி மதிப்பீட்டில், 10 லட்சம் மின் விளக்குகள் மூலம் விலங்குகள், வண்ண வண்ண ஒளிரும் பூக்கள், ஒளிரும் மரங்கள், போட்டோ மற்றும் செல்பி எடுக்கும் இடங்கள், செயற்கை நீரூற்று, மினி 3டி, 5டி சினிமா, ஒளிரும் நீர் பூங்கா மற்றும் பலதரப்பட்ட உணவு அரங்குகள் என 2.47 ஏக்கர் பரப்பளவில் அமைக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூமி பூஜை போடப்பட்டது.

அதன் பிறகு, ஓராண்டாக அங்கு எந்த பணிகளும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டு, மரகத பூங்காவின் கதவுகள் பூட்டு போட்டு பூட்டி வைக்கப்பட்டது. எனவே, மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் விரைந்து தொடங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை, ஏற்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மரகத பூங்காவில் செடி, கொடிகள் மற்றும் மரங்களை பொக்லைன் இயந்திரம் அகற்றி, அங்குள்ள மணல் மேடுகளை சமன்படுத்தி பள்ளம் தோண்டி, முதற்கட்டமாக மின் வயர்கள் கொண்டு செல்ல ராட்சத பிளாஸ்டிக் பைப்புகள் புதைக்கும் பணியும், பொருட்கள் வைக்க பிரமாண்ட ஷெட் அமைக்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. எனவே, ரூ.8 மதிப்பீட்டில் 10 லட்சம் மின் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

* கலை நிகழ்ச்சிகள்
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவின் தொடக்க நாளில் தமிழ் நாட்டின் துணை முதல்வராக மு.க.ஸ்டாலின், கடந்த 2009 ஆண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையில் மரகத பூங்காவை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். ஆரம்ப, காலத்தில் அந்த பூங்காவை முறையாக பராமரித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி அதிகாரிகள் நாளடைவில் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால், அங்கு செடி, கொடிகள் வளர்ந்தும், பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் தஞ்சமடைந்து சீரழிந்து அலங்கோலமாக காணப்பட்டது. கடந்த, 2018ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் அங்குள்ள செடி, கொடிகளை அகற்றி, வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியது. கலை, நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

* ஆன்மிக பக்தர்கள் வருகை
மாமல்லபுரம் பேருந்து நிலையத்தையொட்டி 108 திவ்ய தேசங்களில் 63 திவ்ய தேசமான தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளதால், கோயிலுக்கும் தினமும் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி, வருபவர்கள் இங்குள்ள ஓட்டல், ரெஸ்ட்டாரன்ட், தங்கும் விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் சில நாட்கள் தங்கி ஜாலியாக உலா வந்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து செல்போனில் போட்டோ மற்றும் செல்பி எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி