மாமல்லபுரம் இசிஆர் சாலையில் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் எரியாத மின் விளக்குகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரத்தில் இருந்து திருவிடந்தை வரை சென்டர் மீடியனில் உள்ள மின் கம்பங்களில் இரவை பகலாக்கும் வகையில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில், 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, பராமரித்து வந்தனர். இதில், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் இருந்து மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பிரகாசமாக எரிந்தன.

இதனால், இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் முதல் சிறிய வாகன ஓட்டிகள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சில மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் அப்பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லாமலும், இருள் சூழ்ந்தும் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி வாகனங்களை ஓட்டி வருவதால் சென்டர் மீடியனில் மோதியும், சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் மீது மோதியும் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், வாகனங்கள் ஒன்றன்பின், ஒன்றாக மோதி விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

ஒரு சில நேரங்களில் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. மேலும், மாமல்லபுரத்தில் இருந்து வேலைக்கு சென்று இரவு நேரங்களில் திரும்பி வரும்போது, இருள் சூழ்ந்த இந்த பகுதியை கடந்து ஊருக்குள் செல்ல வேண்டி உள்ளது. இதனை, பயன்படுத்தி தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி, கற்பழிப்பு, சங்கிலி பறிப்பு சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர். அதேபோல், மாமல்லபுரம் வந்து அறை எடுத்து தங்கி புராதன சின்னங்களை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளும் ஒருவித அச்சத்துடனே இந்த பகுதியை கடந்து மாமல்லபுரம் நகருக்குள் சென்று வர வேண்டிய சூழல் உள்ளது.

இதுகுறித்து, தினகரன் நாளிதழில் பலமுறை படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் நேற்று நேரில் வந்து இசிஆர் சாலையில் மின்விளக்குகள் சரிவர எரிகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு சில கம்பங்களில் மின்விளக்குகள் ஏரியாதது தெரிய வந்தது. இதையடுத்து, மின் கம்பங்களில் ஏரியாத பழைய மின் விளக்குகளை கழற்றி புதிய மின்விளக்குகள் பொருத்தும் பணியில் சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பலமுறை படத்துடன் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது