மாமல்லபுரம் கடற்கரை கோயில் செல்லும் நடைபாதையில் மின் விளக்குகள் எரியாததால் சுற்றுலா பயணிகள் அவதி: விரைந்து சீரமைக்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் செல்லும் நடைபாதையில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை விரைவில் சீரமைத்து புதிய மின்விளக்குகளை பொருத்த வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் உலக புகழ் வாய்ந்த சுற்றுலா தலமாகவும், சிற்பங்களுக்கு பெயர்போன நகரமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் இங்குள்ள பாறை குன்றுகளில் வெண்ணெய் உருண்டை கல், அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை அழகுர செதுக்கினர்.

இந்த, புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க நாள்தோறும் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோர் வருகை தருகின்றனர். அப்படி வரும் பயணிகள் பலர் கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இதில், கடற்கரை கோயிலை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சுற்றிப் பார்க்க பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ள நடைபாதையில் மின் விளக்குகள் ஏரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க வரும் பயணிகள் போதிய வெளிச்சம் இல்லை. இது குறித்து பலமுறை பயணிகள் புகார் தெரிவித்தும், தொல்லியல் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கண்டும், காணாததுபோல் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அக்டோபர் முதல் மார்ச் வரை 6 மாதங்கள் சீசன் காலம் ஆகும். தற்போது, சீசன் காலம் தொடங்கி உள்ளதால் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருவார்கள். இவர்கள், வருகையால் போதிய அளவு வருவாய் கிடைக்கும். எனவே, தொல்லியல் துறை அதிகாரிகள் அலட்சிய போக்கை கைவிட்டு சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ள நடைபாதையில் மின் விளக்குகள் பிரகாசமாக எரியும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* பயணிகளின் வருகை அதிகரிப்பு
தற்போது சீசன் காலம் தொடங்கியுள்ளதால் வெளிநாட்டு பயணிகள் கார், வேன் மற்றும் சொகுசு பேருந்துகளில் மாமல்லபுரம் வர தொடங்கி உள்ளனர். அப்படி, வரும் பயணிகள் அதிகளவில் கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் தொல்லியல் துறை அதிகாரிகள் கடற்கரை கோயில் நடைபாதையில் மின் விளக்கு பிரகாசமாக எரியும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

* காயம் அடையும் சுற்றுலா பயணிகள்
மாமல்லபுரம் கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ள நடைபாதையில் மின் விளக்குகள் சரிவர ஏரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், கடற்கரை கோயில் வரும் சுற்றுலாப் பயணிகள் செல்போன் வெளிச்சத்தில் தட்டுத் தடுமாறி செல்கின்றனர். மாமல்லபுரம் கடற்கரையில் வரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள நடை பாதையில் வெளிச்சம் இல்லாததால் அங்குள்ள இருக்கையில் மோதி அடிக்கடி காயமடைகின்றனர். கடந்த, 3 நாட்களுக்கு வெளி மாநில பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் போதிய வெளிச்சம் இல்லாததால் திடீரென தவறி காலில் காயம் ஏற்பட்டது.

Related posts

சந்திரயான் -5 திட்டத்துக்கு அனுமதி

234 தொகுதிக்கு பார்வையாளர்களை நியமித்தது திமுக

லடாக்கில் லேசான நிலநடுக்கம்