மாஸ் வருமானம் தரும் மலேசியன் கோவக்காய்!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு மிகவும் அழகிய பகுதி. இங்குள்ள பல ஊர்கள் இயற்கை எழிலோடு காட்சி அளிக்கும். அவற்றில் சுருளிப்பட்டிக்கென்று சில தனிச்சிறப்புகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது சுருளி அருவி. மழைக்காலங்களில் இங்கு வழிந்தோடும் நீரில் குளிப்பதற்கு கூட்டம் முண்டியடிக்கும். இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது வேறொன்றும் இல்லை. திராட்சைத் தோட்டங்கள்தான். கம்பம் பகுதியில் பல இடங்களில் திராட்சை விளைந்தாலும் சுருளிப்பட்டி திராட்சை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். திராட்சை இந்தப் பகுதியின் முக்கியப் பயிராக இருந்தாலும் மாற்றுப்பயிராக வேறுவகை கொடிக்காய்கறிகளும் இந்தப் பகுதியில் செழித்து வளர்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மலேசியன் கோவக்காய். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் பயிரிடப்பட்டு இருக்கும். இந்த வீரிய ரக கோவக்காய் சாகுபடியைப் பற்றித் தெரிந்துகொள்ள சுருளிப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டியன் என்ற விவசாயியைச் சந்தித்தோம்.

“எங்கள் பகுதியில் திராட்சை சீசன் முடிந்தபிறகு, திராட்சை சாகுபடி செய்யப்பட்ட பந்தலில் வேறுவகையான கொடிக் காய்கறிகளை வளர விடுவோம். அந்த வகையில் நான் தற்போது மலேசியன் கோவக்காயைப் பயிரிட்டு இருக்கிறேன். கோவக்காயில் நாட்டு ரகம், வீரிய ரகம் என இரண்டு ரகம் இருக்கிறது. நான் தற்போது பயிரிட்டிருப்பது வீரிய ரகம். வேளாண் அலுவலகத்தில் கடந்த 5 வருடங்களாக இந்த வீரிய ரக கோவக்காய் சாகுபடிக்கான விதைத் தண்டு கிடைக்கிறது. நானும் அவர்களிடம் வாங்கித்தான் சாகுபடி செய்தேன். தற்போது எனது ஒரு ஏக்கர் நிலத்தில் மலேசியன் கோவக்காயைப் பயிரிட்டு இருக்கிறேன். பயிரிடுவதற்கு முன்பு நிலத்தை ஒருமுறை உழுது ரொட்டவேட்டர் மூலம் சமன்செய்து அதன்பின் குழி அமைத்து கோவக்காயை வளரவிட வேண்டும்.

10×5 அடி என்கிற அளவில் குழி அமைத்தால் ஒரு ஏக்கருக்கு 650 குழிகள் வரும். ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடலாம். செடி நட்டு 60வது நாளில் பூ பூத்து காய்க்கத் தொடங்கிவிடும். சரியாக 90வது நாளில் இருந்து விளைச்சல் எடுக்க ஆரம்பிக்கலாம். எனது தோட்டத்தில் நான் வாரத்திற்கு ஒருமுறை அறுவடை செய்கிறேன். சராசரியாக பார்த்தால் ஒரு அறுவடைக்கு 20 மூட்டையில் இருந்து 25 மூட்டை வரை மகசூல் எடுக்கலாம். நான் அதிகபட்சமாக ஒரு அறுவடையில் 35 மூட்டை வரை எடுத்திருக்கிறேன். ஒரு மூட்டை 60 கிலோ எடை கொண்டது. அறுவடை செய்யப்படும் கோவக்காயை உள்ளூர் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் அந்தக் காய்களை கேரளாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த கோவக்காய் களிமண்ணைத் தவிர மற்ற எல்லா மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. இதனைப் பயிரிட ஆர்வம் உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த விவசாயத்தைத் தொடரலாம். டிப்ளமோ படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நான் ஒரு கட்டத்தில் ஊர் பக்கம் திரும்பலாம் என முடிவெடுத்தேன். ஊர் வந்த பிறகு விவசாயத்தைக் கையில் எடுத்தேன். அப்பாவிற்கு விவசாயம்தான் தொழில். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லாததால் விவசாயம் சார்ந்த தொழில் செய்யாமல் இருந்தேன். தற்போது மிகுந்த ஆர்வத்தோடு விவசாயம் செய்கிறேன். கோவக்காயோடு சேர்த்து வாழை, திராட்சை என வேறு சில பயிர்களையும் சாகுபடி செய்கிறேன். தற்போது நான் முழுநேர விவசாயி ஆகியிருக்கிறேன். இந்தக் காலகட்டத்திற்கு எந்த மாதிரியான விவசாயம் தேவை? எந்தப் பருவத்தில், எதை விதைத்தால் பயனடையலாம்? என யோசித்து விவசாயம் செய்கிறேன். விவசாயத்தில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற நோக்கம் எனக்கு அதிகமாகவே இருக்கிறது’’ என புன்னகையுடன் பேசி முடித்தார் பால்பாண்டியன்.
தொடர்புக்கு:
பால்பாண்டியன்: 97250 17337

கொடிக்காய்களைப் பொறுத்தவரை அவற்றுக்கான சீசனில்தான் பயிரிட முடியும். பாகல், பீர்க்கு, புடலை என எந்தக் காய்கறிகளாக இருந்தாலும் குறிப்பிட்ட சமயத்தில் அதன் விளைச்சலை நிறுத்திவிடும். ஆனால், இந்த மலேசியன் கோவக்காயில் மட்டும் ஒன்றரை வருடம் முதல் இரண்டு வருடம் வரை தொடர்ச்சியாக விளைச்சல் பார்க்கலாம்.

நாட்டு கோவக்காயை விட இந்த மலேசியன் கோவக்காய் விளைச்சலிலும் அளவிலும் பெரிதாகவே இருக்கும். ஒரு நாட்டுக்கோவக்காய் அதிகபட்சமாக 6 செ.மீ வரை வளரும். மலேசியன் கோவக்காய் 10 செ.மீ வரை வளரும். நாட்டுக்காயில் ஒரு அறுவடையில் 10 மூடை விளைச்சல் கிடைக்கும். இந்த ரகத்தில் கூடுதலாக 3 மூடைகளை அள்ளலாம்.

இந்த ரக கோவக்காயில் நிச்சய லாபம் உண்டு. ஏனெனில் சராசரியாக இந்த கோவக்காயின் விலை கிலோவுக்கு 15ல் இருந்து 50 வரை விற்பனையாகும். சாதாரணமாக ரூ.10க்கு விற்றாலும் கூட முறையான லாபம் பார்க்கலாம். ஒரு ஏக்கரில் வாரத்திற்கு குறைந்தபட்சம் 15 மூட்டை அதாவது 900 கிலோ காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை ஆனாலும் கூட ஒரு வாரத்திற்கு ரூ.9000 வருமானம் பார்க்கலாம். அதில் ரூ.4000 செலவு போனாலும் கூட ரூ.5000 லாபம் பார்க்கலாம்.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுக்கு தகுந்த பதிலடி: ஜவாஹிருல்லா

புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு