திருமலையில் 5ம் நாள் பிரம்மோற்சவம்; மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி உலா: இன்று மாலை கருடசேவை


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை மோகினி அவதாரத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை நடைபெறும் கருட சேவையில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 4வது நாளான நேற்றிரவு உலகத்தில் உள்ள மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் தானே என்பதை உணர்த்தும் விதமாக ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருளி அருள்பாலித்தார்.

இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரத்தில்) மாய மோகத்தை போக்கும் விதமாக மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் நாச்சியார் திருக்கோலத்தில் உள்ள தனது உருவத்தை (மகாவிஷ்ணு) கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்தார் என்பதுபோல் நாச்சியாருடன் கிருஷ்ணரும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ முக்கிய வாகன சேவையான கருட சேவை இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கருட சேவையில் சுமார் 3 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருடசேவையை காண நேற்று காலை முதலே பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் இன்று அதிகாலை முதல் அனுமதிக்கப்படவில்லை. இந்த தடை உத்தரவு நாளை காலை வரை அமலில் இருக்கும் என திருப்பதி எஸ்பி. பரமேஸ்வர் தெரிவித்தார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு