கடும் நெருக்கடியில் மலையாள சினிமா நடிகர்கள், டைரக்டர்களுக்கு எதிராக குவியும் பலாத்கார புகார்கள்: நடிகர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்: நடிகர்கள், டைரக்டர்களுக்கு எதிராக அடுத்தடுத்து குவியும் பாலியல் பலாத்கார புகார்களால் மலையாள சினிமா துறை கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாவதாக சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதற்குப் பின் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர்.

மேற்குவங்க நடிகையான ஸ்ரீலேகா மித்ரா, மம்முட்டி நடித்த பாலேரி மாணிக்கம் என்ற படத்தில் நடிக்க வந்தபோது அதன் டைரக்டரும், கேரள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் தன்னிடம் அத்துமீறியதாக கூறினார். இதேபோல ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகரும் மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளருமான சித்திக் தன்னை அறையில் பூட்டி வைத்து பலாத்காரம் செய்ததாக கூறினார். மேலும் தமிழ் நடிகர் ரியாஸ் கானும் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக இவர் குற்றம் சாட்டினார்.

பிரபல நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக டெஸ்சா என்ற காஸ்டிங் இயக்குனரும், நடிகர் சுதீஷ் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஜூபிதா என்ற நடிகையும் குற்றம் சாட்டி உள்ளனர். இதற்கிடையே பாலியல் புகார்களைத் தொடர்ந்து கேரள சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித்தும், மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சித்திக்கும் ராஜினாமா செய்தனர். நடிகர்கள் மீது அடுத்தடுத்து குவியும் பாலியல் பலாத்கார புகார்கள் மலையாள சினிமாத் துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றும் பல நடிகைகள், நடிகர்கள் மற்றும் டைரக்டர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்களை வெளிப்படையாக கூறினர். 1990 காலகட்டத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த கீதா விஜயன் கூறியது: 1991ல் சாஞ்சாட்டம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அதன் டைரக்டரான துளசிதாஸ் என்னிடம் மோசமாக நடக்க முயற்சித்தார். போனில் அழைத்து தன்னுடைய அறைக்கு வருமாறு கூறினார். நான் உடனடியாக அவரை திட்டி விட்டேன்.

இவர் மட்டுமல்லாமல் மேலும் பலர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்தனர். நான் அனைவரிடமும் நோ என்று சொன்னதால் தான் அதன் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இவ்வாறு அவர் கூறினார். நடிகை மினு முனீர் கூறியது: ‘தே இங்கோட்டு நோக்கியே’ என்ற படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. அப்போது என்னை அங்கு வைத்து நடிகர் ஜெயசூர்யா பின்புறமாக வந்து கட்டிப்பிடித்தார்.

தனக்கு திருவனந்தபுரத்தில் ஒரு பிளாட் இருப்பதாகவும், அங்கு வர முடியுமா என்றும் என்னிடம் கேட்டார். ஆனால் நான் முடியாது என்று சொல்லி விட்டேன். மலையாள நடிகர் சங்கத்தில் சேர வேண்டுமென்றால் தன்னுடைய பிளாட்டுக்கு வர வேண்டும் என்று நடிகர் இடைவேளை பாபு என்னிடம் கூறினார். நான் சென்ற போது என்னை அவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதே போல நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷ் மற்றும் மணியன் பிள்ளை ராஜுவும் என்னிடம் அத்துமீறி நடக்க முயன்றனர்.

இதனால் கேரளாவை விட்டு சென்னைக்கு சென்று விட்டேன். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே நாளுக்கு நாள் நடிகர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக நேற்று கொச்சியில் மலையாள நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

* ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரணை துவங்கியது
இதற்கிடையே நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு நேற்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளது. பல நடிகைகளிடம் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறது.

* டைரக்டர் ரஞ்சித் மீது போலீஸ் வழக்கு
படப்பிடிப்பின் போது தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மேற்குவங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா கொச்சி போலீஸ் கமிஷனருக்கு இமெயில் மூலம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து டைரக்டர் ரஞ்சித் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் இபிகோ 354வது பிரிவின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் பாலியல் புகாரில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

* வீட்டிற்கு அழைத்து சீரழித்த நடிகையின் கணவர்
ஒரு முன்னாள் மலையாள ஜூனியர் நடிகை கூறியது: சில வருடங்களுக்கு முன் நடிகர் பாபுராஜ் என்னை போனில் தொடர்பு கொண்டு ஒரு சினிமா தொடர்பாக பேச ஆலுவாவிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார். தன்னுடைய வீட்டில் அந்த சினிமாவை சேர்ந்த சிலர் இருப்பதாகவும் கூறினார். அதை நம்பி நான் அவரது வீட்டுக்கு சென்றேன். ஆனால் பாபுராஜ் மட்டுமே வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வைத்து என்னிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக பின்னர் கொச்சி துணை போலீஸ் கமிஷனராக இருந்த சசிதரனிடம் நான் கூறினேன். புகார் கொடுக்குமாறு அவர் கூறினார். ஆனால் அப்போது கேரளாவை விட்டு நான் வெளியே இருந்ததால் புகார் கொடுக்கவில்லை. என்னிடம் இப்போது போலீஸ் விசாரணை நடத்தினால் அனைத்து விவரங்களையும் கூறுவேன். இவ்வாறு அவர் கூறினார். நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவரான நடிகர் பாபுராஜ் தான் தற்போது மலையாள நடிகர்கள் சங்க தற்காலிக பொது செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?