அம்பலமான அறிக்கை, மிரளும் மலையாள சினிமா…

சினிமா என்றாலே இன்றுவரை பெண்களும், பெண் வீட்டாரும் பயப்பட அங்கிருக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் காரணம். என்னதான் உலகம் வளர்ந்துவிட்ட போதிலும் பொதுஇடத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகத்தான் இருக்கின்றது. அதிலும் சில துறைகள் பெண்களின் பாதுகாப்பிற்கு மாபெரும் சவாலாகவே இருக்கின்றன, அவற்றில் மிக முக்கிய பங்கு சினிமா துறை. இதற்குத்தான் பாராட்டுக்குரிய விதத்தில் மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாவதாக சமீபத்தில் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியாகி. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக கூறத் தொடங்கி உள்ளனர். மலையாள பட உலகின் பிரபல நடிகை ஒருவர், கும்பலால் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் 2017ம் ஆண்டு நடந்தது. இதையடுத்து 7 பேர் கொண்ட கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப் சொல்லித்தான் நடிகையை பலாத்காரம் செய்ததாக கைதானவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து திலீப் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இதனால் மலையாள சினிமா உலகின் நடிகைகள் பலரும் கொதித்து எழுந்தனர். இதையடுத்து நடிகைகள் பார்வதி திருவோத்து, ரேவதி, பத்மப்பிரியா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் இணைந்து ‘உமன் இன் சினிமா கலெக்டிவ்ஸ்’ என்ற குழுவை ஏற்படுத்தினர். இவர்கள் ஒருங்கிணைந்து மலையாள சினிமாவில் நடிகைகள், பெண் கலைஞர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதை எதிர்த்து குரல் கொடுக்க துவங்கினர்.

2019ம் ஆண்டு முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, பெண் கலைஞர்கள் மீதான பாலியல் தொல்லைகள் களைய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடும்படி கேட்டனர். அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா குமாரி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் முன்னணி நடிகைகள் உள்பட 53 பெண் கலைஞர்களிடம் விசாரணை நடத்தி 2019ம் ஆண்டே டிசம்பரில் அறிக்கை சமர்ப்பித்துவிட்டனர். தற்போது இந்த அறிக்கை வெளியானதில் மலையாள சினிமா உலகம் மட்டுமின்றி மொத்த இந்திய சினிமா உலகமும் சிக்கலை சந்தித்திருக்கிறது. பல நடிகைகள், பெண் தொழில்நுட்பக்கலைஞர்கள் என தங்கள்சந்தித்த பாலியல் பிரச்னைகளை குறித்து வெளிப்படையாகப் பேசத் துவங்கியுள்ளனர். புகார் அளிக்கும் பெண்களுக்கு பல்வேறு திரையுலகைச் சார்ந்த பெண் கலைஞர்கள், நடிகைகள் தங்களின் ஆதரவை அளித்து வருகின்றனர். மேற்குவங்க நடிகையான லேகா மித்ரா, மம்மூட்டி நடித்த பாலேரி மாணிக்கம் என்ற படத்தில் நடிக்க வந்தபோது அதன் டைரக்டரும், கேரள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் தன்னிடம் அத்துமீறியதாக கூறினார். இதேபோல ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகரும் மலையாள நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளருமான சித்திக் தன்னை அறையில் பூட்டி வைத்து பலாத்காரம் செய்ததாக கூறினார். மேலும் தமிழ் நடிகர் ரியாஸ்கானும் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டினார். பிரபல நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக டெஸ்சா என்ற நடிகையும், நடிகர் சுதீஷ் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஜூபிதா என்ற நடிகையும் குற்றம் சாட்டினர். இப்படி பல புகார்கள் இதுவரை பதிவாகி மலையாள சினிமாவின் சூழலை சிக்கலாக்கியிருக்கிறது.

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த முன்னணி நடிகர்,நடிகைகளும் தற்போது இதுகுறித்து கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். சமந்தா இது குறித்து கூறுகையில், மலையாளத்தில் உருவாக்கப்பட்ட பெண் கலைஞர்களுக்கான அமைப்பு (WCC) போன்றே, தெலுங்கு சினிமாவில் உருவாக்கப்பட்ட பெண்களின் குரல் (The Voice of Women) என்ற அமைப்பு, அரசாங்கத்திடம் சமர்பித்த அறிக்கையை வெளியிடுமாறு சமந்தா ஆகஸ்ட் 31ம் தேதி அன்று தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தெலுங்கு திரையுலகில் உள்ள அனைத்து பெண்களும் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கின்றனர். கேரளாவில் உள்ள நடிகைகள் கூட்டமைப்பான ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அவர்களின் முயற்சிகள் ‘தி வாய்ஸ் ஆஃப் வுமன்’ இயக்கத்திற்கு வழிவகுத்தது. அதனால் ஈர்க்கப்பட்டு, ‘தி வாய்ஸ் ஆஃப் வுமன்’ தெலுங்கு திரையுலகில் பெண்களை ஆதரிப்பதற்காக 2019இல் அமைக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அக்குழுவின் அறிக்கையை தெலங்கானா அரசு வெளியிட வேண்டும்” என்று சமந்தா அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இது குறித்து கூறுகையில் ‘‘மலையாள நடிகர்கள் சங்கம் பெண் கலைஞர்கள் வைத்த பாலியல் புகார்களை தீர்க்கத் தவறிவிட்டது. அவர்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்க வேண்டும். ஹேமா கமிட்டியில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரணை செய்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விசாரணைக்குப் பிறகு, கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்றால் புகார் அளித்த நடிகைகள் மீதும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிருத்விராஜ் கூறியிருக்கிறார்.‘மலையாள சினிமாவில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாகவே நான் இப்போது முகநூலில் எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து நடிகர்கள் சங்கமும், அதன் தலைமையும் பதில் கூறிய பின்னர்தான் உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய விளக்கத்தைக் கூற முடியும். அதனால் தான் நான் விளக்கம் அளிக்க சற்று காலதாமதம் ஆனது. இந்தத் துறையில் மோசமான செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அனைவரும் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நிகழவே கூடாத சில விவகாரங்கள் நடந்ததால்தான் அது குறித்து ஆராய்ந்து தீர்வு காண ஹேமா கமிட்டியை கேரள அரசு நியமித்தது. இந்தக் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களையும், பிரச்னைகளையும் தீர்ப்பதற்காக கூறப்பட்டுள்ள வழிமுறைகளை நான் வரவேற்கிறேன். அதற்காக சினிமா துறையிலுள்ள அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். தற்போது கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து போலீஸ் மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தின் முன் உள்ளது. யாருக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். ஹேமா கமிட்டியில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்குச் சட்டச் சிக்கல் இருந்தால் புதிய சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். மலையாள சினிமாவில் பவர் குரூப் எதுவும் கிடையாது. அப்படி ஒரு நடைமுறையை சினிமாவில் கொண்டுவர முடியாது. சினிமா துறை நீடிக்க வேண்டும். இவ்வாறு மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி கூறியுள்ளார்.

‘தமிழில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தில் நானும் இருந்தபோது விஷால் தலைமையில் தமிழ் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கிறதா என்று விசாரிப் பதற்காக ஒரு கமிட்டி தொடங்கப்பட்டது. அந்த கமிட்டி இப்போதும் இருக்கிறது. சினிமாவில் பல விஷயங்கள் நடக்கிறது. சிலர் அட்ஜஸ்ட்மென்ட்ன்னு சொல்றாங்க சில அவங்களே ஒத்துழைச்சி சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் பிறகு சம்பந்தப்பட்டவர்களே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் இது முழுக்க முழுக்க தப்பான செயல்தான். பாதிக்கப்பட்டது எந்த பெண்ணாக இருந்தாலும் சரி அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது எல்லாருடைய கடமையாக இருக்கிறது. செந்தில் நல்லவர்.. ஆனால் கவுண்டமணி அப்படி கிடையாது! சூட்டிங்கில் மோசமான பேச்சு! அனுஜா ரெட்டி பேட்டி அதுபோல பெண் நடிகைகளுக்கு எப்படி பாதுகாப்பு தேவைப்படுகிறதோ அதுபோல ஆண் நடிகர்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது. பலர் கஷ்டப்பட்டு ஒரு இமேஜை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சிலர் தப்பு செய்திருக்கிறார்கள் ஆனால் சிலர் செய்யாமல் கூட அடுத்தவர்களால் குற்றம் சாட்டப்படலாம். அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் உண்மை என்ன என்பதை கமிட்டிதான் தீர விசாரிக்க வேண்டும் என்று ஆர் கே சுரேஷ் பேசி இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினி காந்திடம் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘மன்னித்துவிடுங்கள். எனக்கு இது குறித்து ஒன்றும் தெரியாது, என்று பதில் அளித்துள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லால் மற்றும் இதர நிர்வாகிகள் குழு தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இது குறித்து மோகன்லால் பதில் அளித்துள்ளார். மோகன்லால் திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “மிகப்பெரிய மலையாளத்திரைத்துறையில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். சமீபத்தில் எழுந்த பாலியல் பிரச்னை குறித்து AMMA (Association of Malayalam Movie Artists) பேசவில்லை. நடிகர்கள் சங்க நிர்வாகக் குழு, ஹேமா கமிட்டி மூலம் வழங்கப்பட்ட புகார்களால் ராஜினாமா செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நான் மலையாள சினிமாவில் அதிகாரம் கொண்ட எந்த குழுவையும் சேர்ந்தவர் அல்ல, மேலும் அவ்வாறு அதிகாரம் கொண்டவர்கள் பற்றியும் எனக்குத் தெரியாது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது மலையாள சினிமா எடுத்த நல்ல முடிவு” என கூறியுள்ளார்.மலையாள உலகம் மட்டுமின்றிதற்போது தமிழ், வங்காள சினிமா, தெலுங்கு, என பல மொழி சினிமாக்களில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டும், புகார்கள் தெரிவிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் ஒரு சில நடிகர்கள், சினியர் தொழில்நுட்பக் கலைஞர்கள் பதில் அளிக்க மறுப்பதும், கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களிடம் கோபமடைந்து விளாசும் சம்பவங்களும் கூட ஆங்காங்கே நடந்து வருகின்றன. நாடெங்கும் கொல்கத்தா மருத்துவர் துவங்கி, தற்போது மலையாள சினிமா வரை பெண்களின் பாதுகாப்பில் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் இது வருத்தம் என்றாலும் மறுபுறம்இப்போதாவது இந்தப் பிரச்னைகள் வெளிச்சத்துக்கு வந்து கேள்வி கேட்கத் துவங்கியுள்ளனர் என்னும் போது ஆறுதலாகவும் இருக்கிறது. எனினும் இவையனைத்தும் வெறுமனே வைரலாகவும், செய்திகளாகவும் கடக்காமல் குற்றங்கள் களையெடுக்கப்பட்டு தண்டனைகள் தீவிரமானால் மட்டுமே முடிவுக்கு வரும்.
– கவின்

Related posts

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு

திமுக ஆட்சியில் ரூ.92,000 கோடி கடன் வழங்கப்பட்டது: துணை முதலமைச்சர்

1968-ல் விமான விபத்து: பலியான 4 பேரின் உடல் மீட்பு