மலையாள நடிகை பலாத்கார வழக்கு இறுதிகட்ட விசாரணை தொடங்கியது: எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடிகர் திலீப் ஆஜர்

திருவனந்தபுரம்: கடந்த ஏழரை வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொச்சி போலீசார், சம்பவம் நடந்த ஒரு சில நாட்களிலேயே பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் டிரைவரான பல்சர் சுனில்குமார் உள்பட 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியது மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான திலீப் என தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2018ம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆறரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் விசாரணை இன்னும் முடியவில்லை. வழக்கு விசாரணையை முடிப்பதற்கு உச்சநீதிமன்றம் பலமுறை கெடு விதித்தும் விசாரணை நீண்டு கொண்டே சென்றது. இதற்கிடையே கடந்த ஏழரை வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்த முதல் எதிரியான பல்சர் சுனில்குமார் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நேற்று தொடங்கியது.

இதை முன்னிட்டு நடிகர் திலீப், பல்சர் சுனில்குமார் உள்பட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மூடப்பட்ட நீதிமன்றத்தில் அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியுள்ளதால் இன்னும் இரு மாதங்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பேருந்து டிக்கெட் விலையில் விமானத்தில் பயணிக்க அரிய வாய்ப்பு!!

சீதாராம் யெச்சூரி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்