மலராத கட்சி தலைவரை தூக்க திட்டமிட்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலைக்கட்சிக்குள்ள தேனிக்காரரையும், அவரது கூட்டாளிகளையும் அனுமதிக்கலாம்னு ரெண்டாங்கட்ட தலைவர்களுக்குள் பேச்சு ஓடிக்கிட்டு இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வருவாய்க்கு அதிகமா சொத்து குவித்த வழக்கில் இலைக்கட்சியோட மம்மிக்கு பெங்களூரு கோர்ட் 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததோடு மட்டுமல்லாமல் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. அவரது நெருங்கிய தோழிக்கும் 4 ஆண்டு தண்டனை கிடைச்சது.. தண்டனையை அனுபவித்துவிட்டு சின்ன மம்மி வெளியே வந்திருக்காங்க.. ஆனால் இந்த சின்ன மம்மிக்கோ கட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் தீராத ஆசையா இருக்காம்.. ஆனால் மம்மிக்கு ஜெயில் தண்டனை கிடச்சதுக்கு காரணமே இந்த சின்ன மம்மியோட குடும்பம்தான்னு இலைக்கட்சி தொண்டர்கள் மிகுந்த கொந்தளிப்போட இருக்காங்க.. சிங்கமா இருந்த மம்மியை சரித்ததே இந்த கும்பலை சேர்ந்தவர்கள்தான் எனவும் சொல்றாங்க.. அதே நேரத்துல சரியான நேரத்துல சேலத்து இலைக்கட்சி தலைவர் எடுத்த முடிவினால்தான் கட்சி தப்பியதுனு சொல்லிக்கிட்டிருக்காங்க.. என்றாலும் எப்படியாவது கட்சிக்குள்ளே நுழைந்துவிட வேண்டும், மம்மிபோல எல்லோரையும் ஆட்டிப்படைக்கணும்கிற திட்டத்தோடு இருக்காங்களாம் சிறைப்பறவையான சின்னமம்மி.. திடீரென மீண்டும் சுற்றுப்பயணம் செல்ல போறேன்னு சொல்லியிருக்காங்களாம்.. இலைக்கட்சி தலைவரின் ஆட்களை தூக்கிப் போட்ட திட்டத்துல நடிகையை பற்றி தவறான கருத்தை பேசி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரை தூக்கிட்டாங்களாம்.. ஆனால் எத்தனை முறை சுத்தினாலும் உள்ளே வருவதற்கு இடமே இல்லை என்பதில் இலைக்கட்சி தலைவர் உறுதியா சொல்றாராம்.. அதே நேரத்தில் இலைக்கட்சிக்குள் குடைச்சலை கொடுக்க சின்னமம்மிக்கு டெல்லி சிக்னல் கொடுத்திருப்பதாகவும் சொல்றாங்க.. இதையெல்லாம் இலைக்கட்சி தலைவருக்கு தெரிஞ்சிப்போச்சாம்.. அதே நேரத்தில் தேனிக்காரர், அவரது கூட்டாளிகளை மட்டும் கட்சிக்குள்ளே அனுமதிக்கலாமுன்னு ரெண்டாங்கட்ட தலைவர்களுக்குள்ளே பேச்சு எழுந்திருக்காம்.. இவ்வாறு கொண்டு வருவதன் மூலம் தென்மாவட்ட மக்களின் கோபத்தை தவிர்க்கலாம்னு நினைக்கிறாங்களாம்.. இதனை இலைக்கட்சி தலைவருக்கு எப்படி சொல்வதுனு தெரியாமல் தவிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டாஸ்மாக் வருமானத்தை அரசு கஜானாவுக்கு வரவிடாம அள்ளிக் குவிக்கும் மூவர் அணிபற்றி தெரியுமா?..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள், கோவை வடக்கு மண்டலத்தில் 178 கடைகளும், கோவை தெற்கு மண்டலத்தில் 170 கடைகளும் செயல்படுது.. இந்த ரெண்டு மண்டலங்களிலும் மாவட்ட மேலாளர்கள் பணிபுரிஞ்சுட்டு வர்றாங்க.. அன்றாடம் விற்பனையாகும் மதுபானங்களை கண்காணிக்கும் பொறுப்பில் ஈடுபடும் இவர்களுக்கு, ‘எப்.எல்.2’ என்ற தனியார் மதுபான ‘பார்’களுக்கு லைசென்ஸ் கொடுக்கும் பொறுப்பு இல்லையாம்.. ‘எப்.எல்.2’ என்ற தனியார் ‘பார்’களுக்கு கலால் துறையில் பொறுப்பு வைக்கும் கமிஷனர் மற்றும் மாவட்ட காவல் துணை ஆணையர்தான் பொறுப்பாம்.. இவர்களிடம் லைசென்ஸ் பெற்று, கோவையை சேர்ந்த மூவர் அணியினர் பைபாஸ் ரோடுகளில் ‘பார்’ அமைத்து, ஒரு பாட்டிலுக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து, காசு குவிக்கிறார்களாம்.. இதனால், டாஸ்மாக் மதுபானம் விற்பனை மிக குறைந்து விட்டதாம்.. கோவையில் ஆவாரம்பாளையம், சின்னியம்பாளையம், சிங்காநல்லூர், பீளமேடு, காந்திமாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகமான ‘எப்.எல். 2 பார்’கள் இயங்குகின்றன. இவை, மூவர் அணி கட்டுப்பாட்டில் தான் இருக்காம்… இதன்மூலம், இவர்கள் மாதம் பல லட்சங்களை அள்ளி குவிக்கிறார்களாம்.. இதன் காரணமாக அரசு கஜானாவுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சி தலைவருக்கு ஏதாவது பொறுப்ப கொடுத்து தூக்க திட்டமிட்டிருக்கதா பேச்சு அடிபடுதே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரரானவரை டெல்லி மேலிடம் ரொம்பவே நம்பியதாம்.. கதர் சட்டையின் இளம் தலைவரு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் போன நேரத்துல, என் மண் என்ற பெயரில் அந்த மாஜி போலீஸ்காரரும் நடந்தாராம்.. இப்படி ஒரு ஐடியா நமக்கு வரலயேன்னு டெல்லி உச்சி குளிர்ந்து போனதாம்.. எப்படியும் தமிழ்நாட்டில் கால் பதித்து விடலாமுன்னு ரொம்பவும் ஹேப்பியா இருந்தாங்களாம்.. ஆனால் அவரது நடைபயணம் ஒரு மோசடின்னு இங்குள்ள ரெண்டாம்கட்ட தலைவர்கள் டெல்லிக்கு தந்தி அடிச்சும் கேட்கலையாம்.. இந்தநிலையிலதான் தேர்தலில் படுதோல்வியை சந்திச்சது மலராத கட்சி.. அதே நேரத்துல டெல்லியிலும் ஆட்சியை முழுமையா பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதோடு எந்த சட்டத்தையும் தன்னிச்சையா நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டு போச்சாம்..
தமிழ்நாட்டில் இலைக்கட்சியோட கூட்டணி அமைச்சிருந்தால் எப்படியும் பதினைந்து சீட்டாவது பிடிச்சிருக்கலாமுன்னு ரகசிய அறிக்கை ஒண்ணு போனதாம்.. இதனை பார்த்த டெல்லி விழிபிதுங்கி விட்டதாம்.. இலைக்கட்சி கூட்டணிக்கு கதவை திறந்து வச்சிருக்கேன்னு சொன்னேனே… அதை மூடியது யாருன்னு கேட்டுக்கிட்டே இருக்காராம் உள்துறை தலைவரு.. இதனால மாஜி போலீஸ்காரர் மீதும், இலைக்கட்சி தலைவர் மீதும் உள்துறைக்கு ரொம்பவே கோபமாம்.. ஒருவரது பேச்சை கேட்டு கெட்டோம்.. இன்னொருவர் பேச்சை கேட்காமல் கெட்டோமுன்னு சொல்லிக்கிட்டிருக்காராம்.. இன்னும் சில மாதங்களில் மகாராஷ்டிர மாநில தேர்தல் வருதாம்.. முடிந்த கையோடு மாஜி போலீஸ்காரரை ஏதாவது ஒரு கட்சி பொறுப்பை கொடுத்து தமிழ்நாட்டில் இருந்து தூக்கப்போறாங்களாம்.. அல்வா நகரில் போட்டியிட்டு கூடுதல் ஓட்டுக்களை பெற்றவருக்கு மாநில தலைவர் பதவியை கொடுக்க திட்டமிட்டிருக்காங்களாம்.. அதுவரை சிரித்துக்கொண்டே இருப்போமுன்னு ஒதுக்கப்பட்ட ரெண்டாங்கட்ட தலைவர்கள் சொல்றதா தொண்டர்களிடையே பேச்சு எழுந்திருக்கு…’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்