மலைக்கோட்டை கோயிலில் சென்னை பெண் டாக்டர் மயக்கம்: போர்வையை டோலியாக்கி தூக்கி வந்தனர்

திருச்சி: மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் சென்னையை சேர்ந்த டாக்டர் மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது. நீட் தேர்வு முறைகேடு காரணமாக ஏற்பட்டிருந்த எதிர்ப்பால் இதை ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்தது. இந்நிலையில் வௌியூர் தேர்வு மையங்களில் நுழைவுத்தேர்வு எழுத இளநிலை மருத்துவம் முடித்த டாக்டர்கள் பலரும் சொந்த ஊரில் இருந்து அவரவர் தேர்வு எழுத வேண்டிய ஊர்களுக்கு சென்றனர். இவர்கள் தேர்வு ரத்து செய்யப்பட்டது தெரியாமல் தேர்வு மையங்களுக்கு சென்று, ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இதைபோல், மருத்துவ மேற்படிப்புக்கான தேர்வு எழுதுவதற்காக சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த டாக்டர் மோனிஷா என்பவர் தன் தாயாருடன் திருச்சிக்கு வந்தார். திருச்சி வந்த பின்னரே தேர்வு ரத்து செய்யப்பட்ட விவரம் ெதரியவந்தது. இதில் மிகவும் மனம் தளர்ந்தவர், தாயுடன் மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். மன உளைச்சலில் இருந்த மோனிஷா, கோயில் படிகளில் ஏறும் போது திடீரென மயங்கி விழுந்தார். தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் வந்து மோனிஷாவின் மயக்கத்தை தெளிய வைத்து போர்வையில் ‘டோலி’ போன்று அமைத்து மலைக்கோட்டை அடிவாரத்துக்கு தூக்கி வந்தனர். பின்னர் அவரை பாதுகாப்பாக ஆட்டோ ஒன்று ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு