மலைக்கோட்டையில் 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையல்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை தென் கயிலாயம் என அழைக்கப்படுகிறது. இதன் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை உச்சியில் உச்சி பிள்ளையாரும், நடுவே மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமி எழுந்தருளியுள்ளனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி விநாயகருக்கு படைக்க மெகா கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். பின்னர் தலா 75 கிலோ எடையில் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் ஆவியில் வேக வைத்தனர். இன்று காலை 10.30 மணியளவில் 75 கிலோ எடை கொண்ட ஒரு கொழுக்கட்டையை தொட்டில் போல் கட்டி தோளில் சுமந்து சென்று உச்சிப்பிள்ளையாருக்கு படைத்தனர். பின்னர் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு மற்றொரு கொழுக்கட்டை படையல் இடப்பட்டது.

பின்னர் கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே மலைக்கோட்டையில் பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் தொடர்ந்து 14 நாட்கள் பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் உச்சிப்பிள்ளையார் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

Related posts

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு

5 சென்னை ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு; ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவிப்பு