உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 11

கடந்த 2023ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கோ 11 வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் நல்ல விளைச்சல் தரக்கூடிய ரகமாக இருக்கிறது. அனைத்து பருவத்திற்கும் சாகுபடி செய்ய உகந்த இந்த ரகத்தைப் பயிரிடும் முறை குறித்து விளக்குகிறார் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மைய பேராசிரியர் ராமகிருஷ்ணன்.
கோ 11 ரக மக்காச்சோளத்தை விதைக்க நிலத்தை மண்கட்டிகள் மற்றும் களைகள் இல்லாதவாறு உழுவது நல்லது. ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் மற்றும் கூடுதலாக 10 பாக்கெட் (2 கிலோ) அசோஸ்பைரில்லத்தைக் கலந்து இடவேண்டும். இதனால் நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமாகி பயிரின் ஆரம்ப வளர்ச்சி நன்றாக இருக்கும். ஒரு ஏக்கர் பயிரிட 8 கிலோ விதை தேவைப்படும். விதை மூலம் பரவக்கூடிய அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு கார்பண்டாசிம் அல்லது திராம் போன்ற பூசணக் கொல்லிகளில் ஏதாவது ஒன்றை 2 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க பயன்படுத்த வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதால் பூசணத்தின் வித்துக்கள் ஒழிக்கப்பட்டு விடும். பூசணக்கொல்லி விதை நேர்த்தி செய்து குறைந்தது ஒருநாள் கழித்து, மூன்று பொட்டலம் அல்லது 600 கிராம் அசோஸ்பைரில்லத்தை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து அதனுடன் ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை கலந்து சுமார் 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும். அசோஸ்பைரில்லம் கலப்பதனால் காற்றிலுள்ள தழைச்சத்து மண்ணில் நிலைப்படுத்தப்படும்.

விதைப்பு

பார்கள் அமைக்கும்போது 60 செ.மீ இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பார்களில் செடிக்குச் செடி 25 செ.மீ இடைவெளி இருக்குமாறு பக்கவாட்டில் விதைக்க வேண்டும். குழிக்கு இரு விதைகள் என்ற அளவில் விதைத்து, விதைத்தவுடன் தண்ணீர் விட வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் விட வேண்டும். தொடர்ந்து நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு நீர்ப் பாய்ச்சுதல் அவசியம். பொதுவாக மக்காச்சோளப் பயிருக்கு விதைத்த 30 நாட்கள் வரையிலும் குறைவாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதன்பிறகு 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். இந்தத் தருணத்தில்தான் பெண்கதிர் கருவுறுதலுக்கான வழுவழுப்பான சூல்முடியை வெளியே கொண்டு வரும். இந்த தருணத்தில் நீர்ப்பாய்ச்சத் தவறினால் பெண்கதிரின் சூல்முடி வெளியே வராமல் விதைப்பிடிப்பு குறையும். இதனால் விதை உற்பத்தி மிகவும் பாதிக்கப்படும்.

உர மேலாண்மை

ஏக்கருக்கு 10 வண்டி தொழுஉரம் இடவும். மேலும் ஒரு ஏக்கருக்கு 250 கிலோ நைட்ரஜன் (540 கிலோ யூரியா), 75 கிலோ பாஸ்பரஸ் (467 கிலோ சூப்பர் பாஸ்பேட்) மற்றும் 75 கிலோ பொட்டாஷ் (125 கிலோ மியுரியேட் ஆப் பொட்டாஷ்) என்ற அளவில் இட வேண்டும்.

நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை

மக்காச்சோளப் பயிரில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளினால் கணிசமான அளவு விளைச்சல் குறையும். இலைகளில் துத்தநாகம் மற்றும் மக்னீசியம் குறைபாடுகள் அதிக அளவில் காணப்படும். இவற்றில் துத்தநாகம் குறை ஏற்பட்டால் பயிரின் இளங்குருத்துக்கள் வெளிரி விடும். மேலும் முதிர்ந்த இலையின் நரம்புகளுக்கு இடையில் மஞ்சள் கோடுகள் காணப்படும். இக்குறையைப் போக்க ஏக்கருக்கு 8 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்டச் சத்தை அடியுரமாகப் பயன்படுத்தி நல்ல விதை மகசூல் பெறலாம்.மேலும் பயிர்களில் மக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால் அடி இலைகளின் விளிம்புகளுக்கும், நரம்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி வெளிறிக் காணப்படும். இரும்புச்சத்து பற்றாக்குறையால் பயிர் முழுவதும் வெளிறியது போல் காணப்படும். மேற்கண்ட குறைகளைப் போக்க நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தவுடன் மேலாகத் தூவி விட வேண்டும்.

களை நிர்வாகம்

விதைப்பு செய்த 25ம் நாள் ஒருமுறையும், 45ம் நாள் ஒருமுறையும் களையெடுக்க வேண்டும். களையெடுத்த பின்பு உரமிட்டு நன்றாக மண் அணைக்க வேண்டும். களைக்கொல்லி தெளித்தும் களை களைக் கட்டுப்படுத்தலாம். அட்ரசின் எனப்படும் களைக்கொல்லி மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் சுமார் 400 லிட்டர் தண்ணீரில் சீராகக் கலக்கி விதைப்பு செய்த 3ம் நாள் தெளிக்கலாம். பின்பு உயிர்த் தண்ணீர் விடலாம்.

பூச்சி, நோய் கட்டுப்பாடு

பொதுவாக மக்காச்சோளத்தில் சமீப காலத்தில் படைப்புழு தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த இமாமெக்டின் பென்சாயேட் 5 ஜி மருந்தை ஏக்கருக்கு 80 கிராம் அல்லது நவலுரான் 300 மி.லி. அல்லது ஸ்பைனிடோரம் 100 மி.லி. என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். அடிச்சாம்பல் நோய் தாக்குதல் ஏற்பட்டால் ஏக்கருக்கு மெட்டாக்சில் 400 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

மக்காச்சோளக் கதிரை மூடியுள்ள மேலுறையின் பச்சை நிறம் காய்ந்து வெள்ளை நிறமாக மாறியவுடன் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை தருணத்தில் விதைகளின் ஈரப்பதம் 25 சதம் இருக்கும். மேற்கண்ட முறைகளைக் கையாள்வதன் மூலம் ஒரு இறவையில் ஏக்கருக்கு 3200 கிலோ மற்றும் மானாவாரியில் ஏக்கருக்கு 2600 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
தொடர்புக்கு:
முனைவர் ப. இராமகிருஷ்ணன் 63804 88348.

Related posts

துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு தகுதி உள்ளது: தமிமுன் அன்சாரி பேட்டி

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அசத்தல்: ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி

நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கு: ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை