மகர சங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரியகோயில் நந்திக்கு 1.5 டன் காய், கனிகளால் அலங்காரம்: 108 பசுக்களுக்கு கோ பூஜை

தஞ்சாவூர்: மகர சங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மகா நந்திக்கு 1.5 டன் காய், கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 108 பசுக்களுக்கு கோ பூஜை நடந்தது. தஞ்சாவூர் பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோயிலில் மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டது. இந்த நந்தியம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகர சங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மகர சங்கராந்தி பெருவிழா நடந்தது. இதையொட்டி நந்தியம் பெருமானுக்கு ஒன்றரை டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா மற்றும் பால்கோவா பயன்படுத்தப்பட்டது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 16 வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு கோபூஜை நடந்தது. மாடுகள் மீது சந்தனம், குங்குமம் பூசி, மாலை அணிவித்து பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ பூஜை நடந்தது. மாட்டின் உரிமையாளர்களுக்கு பட்டு துண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோ பூஜை செய்து வழிபட்டனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி