யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை பாக்.கில் ஆட்சி அமைப்பது யார்? இம்ரான் ஆதரவு சுயேட்சைகள் அதிக இடங்களில் வெற்றி, நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கூட்டணிக்கு முயற்சி

ராவல்பிண்டி: முன்னாள் பிரதமர் இம்ரான் ஊழல் வழக்கில் சிறையில் இருந்த நிலையில் அவரது கட்சியின் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த வியாழன்று பொதுத்தேர்தல் முடிந்தது. 2 நாளாக ஓட்டுக்களை எண்ணும் பணி நடக்கிறது. மொத்தம் உள்ள 265 இடங்களில் தேர்தல் நடந்த 264 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறையில் உள்ள இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சையாக களம் இறங்கிய வேட்பாளர்கள் 101 பேர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் நவாஸின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியானது 73 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் பெனாசிட் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியானது 54 இடங்களை கைப்பற்றியுள்ளது. முட்டாஹிதா குவாமி இயக்கமானது 17 இடங்களில் இதர சிறிய கட்சிகள் ஒரு சில இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்க இம்ரான் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் தனியாக முயற்சி எடுத்து வருகிறார்கள்.  அதே போல் நவாஸ், பிலாவல் பூட்டோ இணைந்து தனி அணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சி எடுத்து வருகிறார்கள்.

* தேர்தல் முறைகேட்டை எதிர்த்து வழக்கு
பாகிஸ்தான் தேர்தலில் ஏராளமான முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இம்ரான்கான் கட்சி ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றியை தடுக்க இந்த முறைகேடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் லாகூர் தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தோல்வி அடைந்த போதிலும் தேர்தல் ஆணையம் வெற்றி பெற்றதாக அறிவித்து உள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

* இம்ரானுக்கு ஜாமீன்
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மே 9ம் தேதி ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

* 170 இடங்களில் வெற்றி இம்ரான்கான் அறிவிப்பு
சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உரை ஏஐ தொழில்நுட்பத்தில் பதிவேற்றப்பட்டு கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இம்ரான் கான் கூறுகையில், ‘‘தேர்தல் முடிவுகளுக்காக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. படிவம் 45ன்படி நாம் 170 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகளின்படி கூட பிடிஐ கட்சியை விட 30 இடங்கள் குறைவாக இருந்தாலும் வெற்றி பேச்சை பேசுபவர்(நவாஸ்) ஒரு முட்டாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு