நீர்வளம், பொதுப்பணி, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: நீர்வளம், பொதுப்பணி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறையின் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இன்று மாற்றப்பட்டுள்ளனர். தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் செயலாளராக பணியாற்றி வரும் கே.மணிவாசன், நீர்வளத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் பி.சந்திரமோகன் சுற்றுலாத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுப்பணித்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் பி.செந்தில்குமார், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளராக பணியாற்றி வரும் சுப்ரியா சாகு, சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி வரும் ககன்தீப் சிங்பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறையின் செயலாளராக இருந்த கார்த்திக், விடுமுறையில் உள்ளார். நெடுஞ்சாலைத்துறையின் திட்ட இயக்குநராக இருந்த செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழக நிர்வாக இயக்குநராக இருந்த ஜான் லூயிஸ், சமூக நல பாதுகாப்புத்துறை இயக்குநராகவும், வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் செயலாளராக இருந்த விஜயலட்சுமி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநராகவும், நில சீர்திருத்தத்துறை ஆணையராக இருந்த வெங்கடாச்சலம், வரலாற்று ஆவணங்கள் காப்பகத்துறையின் ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறையின் திட்ட இயக்குநராக இருந்த ஹரிகரன், நில நிர்வாக சீர்திருத்தத்துறையின் ஆணையராகவும், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை உறுப்பினர் செயலராக இருந்த லில்லி, போக்குவரத்துத்துறையின் சிறப்பு செயலாளராகவும், நீர்வளத்துறை செயலாளராக உள்ள சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு காகித தொழிற்சாலையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும், அந்த பதவியில் இருந்த சாய்குமார், தொழிற்சாலை முதலீட்டுக் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறையின் தலைவராக இருந்த மகேஷ்வரன், தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேசன் நிர்வாக இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செய்தித்துறை இயக்குநராக உள்ள வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் தலைவர் பதவியை கூடுதலாகவும் கவனிப்பார். தமிழ்நாடு நீர்பாசனம் மற்றும் விவசாயத்துறை நவீனமாக்கல் துணையின் திட்ட இயக்குநராக இருந்த ஜவகர், சமூக சீர்திருத்தத்துறையின் செயலாளர் பதவியை கூடுதலாக கவனிப்பார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

சென்னையில் TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு

12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!