காங்கிரசில் இணைந்த மஜதவினர் நல திட்டங்களால் மாதம் ரூ.5 ஆயிரம் லாபம் அடையும் குடும்பங்கள்: டி.கே.சிவகுமார் பெருமிதம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொண்டு வரும் மக்கள் நல திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்தினரும் மாதம் ரூ.5 ஆயிரம் லாபம் அடைந்து வருகிறார்கள் என்று துணை
முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். மாநிலத்தின் ராம்நகரம் மாவட்டம், சென்னபட்டணாவில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியை விட்டு விலகி துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

அவர்களுக்கு கட்சி சால்வை அணிவித்தும், கையில் கட்சி கொடி கொடுத்தும் சேர்த்து கொண்டார். அப்போது டி.கே.சிவகுமார் பேசும்போது, மாநில அரசின் சார்பில் செயல்படுத்தி வரும் ஐந்து உத்தரவாத திட்டங்களை 420 திட்டங்கள் என்று பாஜ தலைவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த திட்டம் செயல்படுத்தி வருவதால், மாநில அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளதாக விமர்சனம் செய்கிறார்கள். மக்கள் கொடுக்கும் வரி பணத்தை மக்களுக்கே பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கி வருகிறோம். மக்கள் வரி பணத்தை கருவூலத்தில் சேமித்து வைப்பதால் என்ன நன்மை இருக்கும் பாஜ தலைவர்களுக்கு புரியவில்லை.

மாநில அரசு செயல்படுத்தி வரும் ஐந்து உத்தரவாத திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்தினரும் மாதம் கணிசமாக ரூ.5 ஆயிரம் பலனடைந்து வருகிறார்கள். திட்டம் குறித்து பெண்களிடம் தொடர்பு கொண்டு பேசும்போது, மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் உத்தரவாத திட்டங்கள் மூலம் நல்ல பலனடைந்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள். இந்த திட்டத்தினால் மக்கள் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்து வருவதால், அதை பொறுத்து கொள்ள முடியாமல் விமர்சனம் செய்கிறார்கள். பெங்களூரு ஊரக மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டி.கே.சுரேஷ் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து பாஜ-மஜத கூட்டணி சார்பில் அனிதாகுமாரசாமியை களத்தில் நிறுத்தினர். இருப்பினும் நீங்கள் அந்த கூட்டணியை ஆதரிக்காமல் சுரேஷை 1.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். வரும் தேர்தலிலும் இதே வெற்றியை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காரணம் வரும் தேர்தலில் மஜத-பாஜ கூட்டணி அமைத்துள்ளதை ராம்நகரம் மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த மாநில மக்களும் ஏற்று கொள்ளவில்லை. அந்த கூட்டணி தர்மத்தை விரும்பாதவர்கள் தான் சாரை சாரையாக காங்கிஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள் என்றார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு