பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கடற்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, இன்று மற்றும் நாளை குறிப்பிட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் பொது போக்குவரத்தில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஏராளமான மக்கள் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் என இந்த ரயில் சேவையை நம்பியுள்ளனர்.

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் முழுவதுமாக அல்லது பகுதியாக ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி, சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவையில் இன்று (20ம் தேதி) மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கு தாம்பரத்துக்கு புறப்படும் மின்சார ரயில்கள், இரவு 8.05 மணிக்கு திருவள்ளூருக்கு, இரவு 10.45 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், நாளை (21ம் தேதி) அதிகாலை 4.05 மணிக்கு, கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளூரில் இருந்து இரவு 9.35 மணி, கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து, தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூரில் இருந்து இயங்கும். இரவு 10.10, 10.40, 11.15 ஆகிய நேரங்களில் கூடுவாஞ்சேரியில் இருந்து, சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள், இரவு 8, 9.10, 10.10, 11 மணிக்கு செங்கல்பட்டு மற்றும் திருமால்பூரில் இருந்து வரும் மின்சார ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது.இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்