130 ஆண்டு பாரம்பரியமிக்க பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளி கட்டிடத்தை பராமரிப்பது எப்படி?..துறை செயலாளர் ஆனந்தகுமார் திடீர் ஆய்வு

பூந்தமல்லி: பூந்தமல்லியில் பார்வைத்திறன் குறைபாடுடையோர் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பார்வைத் திறன் குறைபாடு உடைய மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். அவர்களுக்கு இங்கு விசேஷ முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து பார்வைத் திறன் குறைபாடு உடைய மாணவர்கள் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார் இந்த பள்ளியில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இந்த பள்ளி கட்டிடம் 130 ஆண்டுகள் பழமையான, வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம். பாரம்பரியமிக்க கட்டிடத்தை முழுவதுமாக அவர் ஆய்வு செய்தார். அப்போது, கட்டிடத்தில் பழுது ஏற்படாமல் இருக்கவும், மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும், பள்ளி வளாகத்தில் புதர் போல வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றவும், கட்டிடத்தின் மேம்பாட்டு பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பார்வை குறைபாடு உடைய மாணவர்களுக்கான ஸ்மார்ட் வகுப்புகளில் கற்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் விஜய்ஆனந்த், பள்ளி முதல்வர் அருளானந்தன் மற்றும் அதிகாரிகள் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் உடனிருந்தனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்