மஹுவா மொய்த்ரா மீது சிபிஐ விசாரணைக்கு லோக்பால் உத்தரவா?: பாஜ எம்பி துபே தகவலால் பரபரப்பு

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, விலையுயர்ந்த கைப்பை, செருப்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கேள்வி கேட்டதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை நெறிமுறைக் குழு ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், துபே நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘எனது புகாரின் பேரில் லோக்பால் அமைப்பு இன்று தேச பாதுகாப்பை அடமானம் வைத்து ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது’’ என்றார். ஆனால் இது தொடர்பாக லோக்பால் அமைப்பு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கு பதிலடி தந்த மஹுவா தனது டிவிட்டர் பதிவில், ‘‘ ரூ.13,000 கோடி அதானி நிலக்கரி ஊழல் தொடர்பாக முதலில் சிபிஐ வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இதை சிபிஐ விசாரித்த பிறகு என்னிடம் தாராளமாக வரட்டும், என் செருப்புகளை எண்ணிக் கொள்ளட்டும்’’ என்றார்.மற்றொரு பதிவில் மஹுவா, ‘‘லோக்பால் உயிர்ப்புடன் இருப்பதை அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி’’ என கிண்டலடித்துள்ளார். இதற்கிடையே, மஹுவாவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான வரைவு அறிக்கையை ஏற்றுக் கொள்ள 15 உறுப்பினர்கள் கொண்ட மக்களவை நெறிமுறைக் குழு இன்று கூட உள்ளது.

Related posts

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்