மிஸ்டர் & மிஸஸ் மாஹி

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது பழமொழி மற்றும் பழைய மொழி. ஆனால் ஒரு பெண்ணிற்கு பின்னால் ஒரு ஆண் நின்றால் அவள் எப்படிப்பட்ட வெற்றியை அடைவாள் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக வெளியாகி இருக்கிறது ‘மிஸ்டர் & மிஸஸ். மாஹி’ திரைப்படம். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாகபிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்திருக்கிறார். படத்தை கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க ஷரண் சர்மா இயக்கியிருக்கிறார்.

மஹேந்திரா அகர்வால் என்கிற மாஹி கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் மிக்கவராக பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார் . எப்படியாவது இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டும் என சிறுவயது முதலே கனவுகளுடன் இருக்கும் மாஹி பல போராட்டங்களை சந்தித்தும்கூட அவரது முயற்சிகள் அத்தனையும் தோல்வியில் முடிகின்றன. இதற்கிடையில் மகனின் ஆசையையும் கனவையும் புரிந்துகொள்ளாத தந்தை தனது விளையாட்டுப்பொருட்கள் விற்கும் கடையை பார்த்துக்கொள்ள வேண்டி தனது மகனை வற்புறுத்துகிறார். இதற்கிடையில் மாஹியின் தம்பி மிகப் பெரும் பாப் பாடகராக பிரபலமாக இருக்கிறார். அவரையும் ஒப்பிட்டு தந்தை மாஹியை திட்டிக் கொண்டே இருக்கிறார். ஆனால் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கும் மாஹி ஒரு கட்டத்தில் தன்னால் இதற்கு மேல் முடியாது என வெறுப்படைந்து அப்பாவின் விளையாட்டுப்பொருட்கள் விற்கும் கடையை கவனிக்கத் துவங்குகிறார்.

மகனுக்கு ஒரு வழியாக பொறுப்பு வந்துவிட்டது என மகிழ்வுடன் அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்யவும் ஏற்பாடு செய்கிறார்கள். மனைவியாக வருகிறார் மஹிமா அகர்வால் என்கிற மாஹி. எம்பிபிஎஸ் முடித்துவிட்டு ஜூனியர் மருத்துவராக வேலை செய்து கொண்டிருக்கிறார் மஹிமா. எப்படியாவது ஏதேனும் பொய் சொல்லியாவது தனது மகனை ஒரு நல்ல பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார் மகேந்திரனின் தந்தை. ஆனால் தன்னால் எவ்வளவு முயற்சி செய்தும் எதையும் சாதிக்க முடியவில்லை என்னும் உண்மையை தனக்கு வரவிருக்கும் எதிர்கால மனைவியிடம் மறைக்கக் கூடாது என முடிவு செய்து உண்மையை மஹிமாவிடம் பகிர்ந்து விடுகிறார் மஹேந்திரன். மஹேந்திரனின் உண்மையும் நேர்மையும் மஹிமாவிற்கு பிடித்துப் போக திருமணத்திற்கு சம்மதிக்கிறார். திருமணமான முதல் இரவிலேயே தனக்கு தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு இந்திய அணி விளையாடும் கிரிக்கெட்டை ஆர்வமாக பார்க்கிறார் மஹிமா.

தன் மனைவிக்கும் கிரிக்கெட்டில் இருக்கும் ஆர்வம் குறித்து தெரிந்து கொள்ளும் மஹேந்திரனுக்கு ஆச்சரியமும் ஆனந்தமும் ஒருசேர கிடைக்கிறது. இருவருக்கும் மிகப்பெரிய சந்தோஷமே ஒன்றாக இணைந்து கிரிக்கெட் பார்ப்பது மற்றும் டிக்கெட் எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட அரங்கத்தில் அமர்ந்து கிரிக்கெட் பார்ப்பது இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது இருவரின் வாழ்க்கையும். ஒரு பக்கம் மருத்துவராகவும் மஹிமா தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார். இதற்கிடையில் அப்பாவின் விளையாட்டு ப்பொருட்கள் விற்கும் கடையை பார்த்துக் கொள்ளும் மஹேந்திரனுக்கு தன்னுடைய பயிற்சியாளர் மூலம் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியாளராக சேரும் வாய்ப்பு வருகிறது. ஆனால் தான் கிரிக்கெட் ஸ்டாராக இருக்கவே விரும்பியதாக சொல்லி மஹேந்திரன் பயிற்சியாளராக வந்த வாய்ப்பை உதாசீனம் செய்கிறார். ஆனால் ஒரு நாள் இந்திய கிரிக்கெட் அணியில் தன்னுடைய மாணவர் ஒருவர் தேர்வாகவே அந்த பயிற்சியாளரை ஊரே கொண்டாடி தேரில் கூட்டி வருவதை பார்க்கும் மஹேந்திரன் தனக்கு வந்த வாய்ப்பின் அருமையை புரிந்து கொள்கிறார். ஆனால் அவர் செல்லும் பொழுது காலியாக இருந்த பயிற்சியாளர் வேலையும் தற்போது இல்லை என்ற சூழல் உருவாக அடுத்து என்ன என்று தடுமாறுகிறார் மஹேந்திரன்.

அதேசமயம் தன்னுடன் வந்திருந்த மனைவி மஹிமா விளையாட்டு மைதானத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்படி கிரிக்கெட் விளையாட்டில் அசத்திக்கொண்டிருக்கிறார். அவர் அடித்ததில் பந்து மகேந்திரனும் பயிற்சியாளரும் பேசிக் கொண்டிருக்கும் அறை கண்ணாடி உடைந்து விழ அப்போதுதான் மஹேந்திரனுக்கு தன் மனைவியின் திறமை புலப்படுகிறது. தனக்கு சிறு வயது முதலே பெண்கள் கிரிக்கெட் அணியில் இணைந்து இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பதே ஆசை எனவும் தன் தந்தையின் ஆசையால் தான் மருத்துவராக வேலை செய்வதாக சொல்கிறார் மஹிமா. வழி பிறந்தவராக மஹேந்திரன் தனக்கு மாணவியாக தனது மனைவியை தேர்வு செய்து பயிற்சி கொடுக்கிறார் . இருமனதாகவே தயக்கத்துடன் ஒப்புக்கொண்டு தன் கணவனின் வழிகாட்டலில் தொடர்ந்து நகரம், மாநிலம், என ஒவ்வொரு கட்டமாக முன்னேறிச் செல்கிறார் மஹிமா. ஒரு கட்டத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படும் மஹிமாவை மாநில மீடியாக்கள் அனைத்தும் சூழ்ந்து கொண்டு பேட்டிகள் எடுக்கின்றன. இதனால் தனக்கு என்ன லாபம், தன்னுடைய பெயர் வெளிவரவில்லையே என மஹேந்திரனின் மனம் சற்றே குழப்ப நிலைக்கு ஆளாகிறது. கணவனின் மனமாற்றத்தால் தொடர்ந்து சரியான பயிற்சியும் கிடைக்காமல் போட்டிகளிலும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறத் துவங்குகிறார் மஹிமா. இவ்விருவரும் குழப்பங்களும் தீர்ந்து மஹேந்திரன் தன் மனைவியை எப்படி வெற்றி பெறச் செய்ய வைக்கிறார், மேலும் இந்திய அணிக்காக மஹிமா தேர்வானாரா இல்லையா என்பது மீதி கதை.

மஹிமா அகர்வாலாக ஜான்வி கபூர், மஹேந்திரன் அகர்வாலாக ராஜ்குமார் ராவ். இருவரின் நடிப்பிலும் அவ்வளவு நேர்த்தி. இருவருக்கும் இடையே உண்டாகும் குழப்பங்கள், அதனால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள், தடுமாற்றம் என இன்று பல வீடுகளில் பல தம்பதியர்களுக்கிடையே நடக்கும் ஈகோ பிரச்சனையை மிக ஆழமாகவும் அற்புதமாகவும் தங்கள் நடிப்பால் எடுத்து வைக்கிறார்கள். குறிப்பாக மனைவி பிரபலமாவதையும் தன்னைவிட அதிகம் சம்பாதிப்பதையும் இக்காலத்திலும் கூட சில ஆண்கள் விரும்புவதில்லை என்பதை எளிமையாக எடுத்து வைத்து மஹேந்திரன் கதாபாத்திரத்தின் அம்மா மூலமாகவே அதற்கும் வகுப்பெடுத்திருக்கிறார் இயக்குனர் சரண் சர்மா. ‘ எந்த பிரதிபலன்களும், புகழும் எதிர்பாராமல் தன்னையே அர்ப்பணித்து குடும்பத்துக்காக உழைக்கும் எந்த அம்மாவும் தனக்கான அங்கீகாரமும் அல்லது ஸ்டார் அந்தஸ்தும் எதிர்பார்ப்பதில்லை. சந்தோஷமும் மனதிருப்தியும் நீயாக நினைத்தால் மட்டுமே அது உனக்குள் உண்டாகும்.

கையில் இருக்கும் ஆனந்தத்தை விட்டு விட்டு எங்கேயோ தேடுகின்றாய் ‘ என மஹேந்திரனின் அம்மா கூறும் காட்சி அத்தனை மனிதர்களுக்குமான பாடமாகவே அமைந்திருக்கிறது. ஆசை , கனவு என்பது ஆண் பெண் இருவருக்கும் சமம் இதில் ஒருவருக்கொருவர் துணையாக நின்று உதவி செய்தால் இருவருமே பல வெற்றிகளை அடையலாம் என இப்போதைய தலைமுறைக்கு தேவையான அறிவுரையையும் எடுத்து வைத்திருக்கிறது இந்த திரைப்படம். அதிலும் பிள்ளைகளின் கனவுகளுக்குக் காசை இறைப்பது இரண்டாம் பட்சம் தான் முதலில் அவர்களுக்கு பக்க பலமாக இருந்து அவர்களை ஊக்குவித்தாலே பல வெற்றிகளை அவர்கள் அடைவார்கள் என்னும் கருத்தையும் முன் வைத்திருக்கிறது இந்த மிஸ்டர் & மிஸஸ் மாஹி திரைப்படம்.
– மகளிர் மலர் குழு.

Related posts

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

“அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு