மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் சென்னை முதன்மை கல்வி அலுவலரை பணியிடமாற்றம் செய்ய பரிந்துரை

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் மூடநம்பிக்கையை விதைக்கும் வகையில் பேசியதாக புகாருக்குள்ளான மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். முதற்கட்டமாக அந்த 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் கடந்த வாரம் சைதாப்பேட்டை, அசோக்நகர் பள்ளிகளில் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் விசாரணை அறிக்கை இரண்டு நாட்களுக்கு முன்பு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, பேச்சாளர் மகாவிஷ்ணுவை பள்ளிகளில் பேச அனுமதித்ததற்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் என்பவர்தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் தஞ்சாவூருக்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஏஞ்சலோ இருதராஜ், சென்னை மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு