மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்

சென்னை: மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை அசோக்நகர், சைதாப்பேட்டை பள்ளி மாணவர்களுக்கிடையே மூட நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக கல்வி சாராமல் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நிகழ்த்தப்பட்ட விவகாரத்தில் சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த விசாரணை குழு கடந்த வெள்ளிக்கிழமை அசோக்நகர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டது. அப்போது சொற்பொழிவு நிகழ்த்தப்பட்ட நாள் அன்று பள்ளியில் என்ன நடந்தது. இவர்களை யார் அழைத்தார்கள். எஸ்என்சி மூலமாக நடத்தப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய நிலையில் அதனை எஸ்என்சி உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.

ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், பள்ளி சார்ந்த அனைவரும் இதனை எழுத்து பூர்வமாக பள்ளி கல்வித்துறை இயக்குனரிடம் தாக்கல் செய்தனர். ஆசிரியர்களின் எழுத்துப்பூர்வ கடிதத்தின் அடிப்படையில் அதனை பதிவு செய்து, ஆராய்ந்து, தேவைப்படும் பட்சத்தில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும், மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். தேவைப்படும் பட்சத்தில் ஆசிரியர்கள் 2வது முறையாகவும் விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்