சரத்பவாரிடம் முதல்வர் பதவியை கேட்டு பெற்றவர் உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சாடல்


மும்பை: சரத்பவாரிடம் முதல்வர் பதவியை கேட்டு பெற்றவர் உத்தவ் தாக்கரே என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடுமையாக தாக்கி பேசினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்னாத் ஷிண்டே ஒரு அணியாகவும், உத்தவ் தாக்கரே ஒரு அணியாகவும் இயங்கி வருகின்றனர். தற்போது, ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் பாஜவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளனர். ஏக்னாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில் உண்மையான சிவசேனா யார் என்றால் தேர்தலை நடத்துங்கள், தெரியும் என்று மும்பையின் சிவாஜி மகாராஜ் பூங்காவில் நடந்த தசரா விழாவில் உத்தவ் தாக்கரே கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் மும்பை ஆசாத் மைதானத்தில் சிவசேனா தலைமையிலான தசரா பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது: 2004ம் ஆண்டு முதல்வராக வேண்டும் என்பது உத்தவ் தாக்கரேவின் ஆசை. அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர் முதல்வர் பதவிக்கு ஆர்வம் காட்டாதது போல பாசாங்கு செய்தார். 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சரத்பவாரின் ஆலோசனையின் பேரில் அவர் முதல்வர் பதவி ஏற்று கொண்டதாக பகிரங்கமாக கூறப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால், சரத்பவாரிடம், உத்தவ் தாக்கரேவை அந்த பதவிக்கு பரிந்துரைக்க 2 நபர்கள் அனுப்பப்பட்டனர்.

இதன்மூலம்தான் அவர் முதல்வரானார். அவர், சரத்பவாரிடம் பதவியை கேட்டு பெற்றார். உத்தவ் தாக்கரே பல முகமூடிகளை அணிந்து கொண்டு, நேர்மையாக இருப்பது போன்ற முகத்துடன் நுட்பமான அரசியலை செய்தார்.இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்