மகத்துவம் மிகுந்த மண்பானை சமையல்!

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் சமையல் செய்வதற்கு பலவிதமான பாத்திரங்கள் வந்துவிட்டன. எண்ணெய் இல்லாமல் சமைக்க நான்ஸ்டிக், சூடாகப் பராமரிக்க ஹாட்பாக்ஸ் என விதவிதமான இத்யாதிகள் வந்தாலும் மண்பானை சமையலுக்கான மவுசு எப்போதும் தனிதான். சுவையில் மட்டுமல்ல, சில மருத்துவக்குணங்களும் மிகுந்திருப்பதால் மண்பானை சமையலின் கிராப் எப்போதும் உயர்ந்தபடிதான் இருக்கும். அப்படி என்னதான் இருக்கு மண்பானை சமையலில் என்கிறீர்களா? இதோ கொஞ்சம் தகவல் மட்டும் தருகிறோம். இது ஒரு பானைக்கு சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான். இன்றைய நாளில் எவர்சில்வர் பாத்திரங்களையும், குக்கரையும் பயன்படுத்துவதால் உணவின் சுவையே மாறிவிட்டது. மேலும், உடலுக்கு பாதிப்புகளையும் உண்டாக்குகிறது. சத்துக்களுடன், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கக்கூடிய இயற்கை உணவுகளை முறையாகச் சமைத்து உண்ணும்போது அதன் முழுச்சத்தும் நம் உடலுக்குக் கிடைக்கும்.

அந்த வகையில், மண்பானைச் சமையல் என்பது மரபு மட்டுமல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரிக்கக்கூடியது. மேலும், மண்பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் செரிமானமும் ஆகக்கூடியது. பொதுவாக, உணவைச் சமைக்கும்போது உணவில் உள்ள தாதுக்கள் உள்ளிட்ட முக்கியமான சத்துகள் ஆவியாகிவிடும். குறிப்பாக, பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோஃபில் எளிதில் ஆவியாகிவிடும். ஆனால், மண்பானையில் சமைக்கும்போது அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும்.மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும். இதனால் மண்பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப் போன்ற தன்மையைப் பெறும். இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.மண்பானைச் சமையலுக்கு அதிக எண்ணெயும் தேவைப்படாது. அது உணவுக்குத் தேவையான எண்ணெயை மட்டுமே எடுத்துக் கொள்ளும். இதுவும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணம்.அதேபோல, மண்பானையில் சமைத்த உணவை அடிக்கடி சூடுபடுத்தத் தேவையில்லை.

மற்ற பாத்திரங்களை விட சீரான வெப்பநிலையை அதிகநேரம் பராமரிக்கும். இதனால், மண்பானையில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். மேலும், மண்பானை நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும். இதனால்தான் அந்தக் காலங்களில் மீன் குழம்பை ஒருவாரம் வரை கூட வைத்திருந்து சாப்பிட்ட போதிலும் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை.மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலதத்தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. நல்ல பசியையும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும். குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும். உடல் சூட்டைத் தணிக்கும். இப்படி மண்பானையின் மகத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். அறுசுவையான உணவும் ஆரோக்கியமான உணவும் கிடைக்க வேண்டுமென்றால் மண்பானையில் சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது. மண்பாண்டம் என்பது களிமண்ணால் செய்யப்படக் கூடியது ஆகும்.

இதிலிருக்கும் காரத்தன்மை உணவில் இருக்கும் பிஹெச் அளவை முறையாக பராமரித்து வரும். அதனால் உணவின் சுவை அதிகரிக்க செய்கிறது. இதனால் ஆரோக்கியம் பன்மடங்கு பெருக செய்கிறது. இதில் இருக்கும் இரும்பு, கால்சியம் போன்றவை சமைக்கும் உணவுப் பொருட்களிலும் கலந்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மண்பாண்டத்தில் சமைக்கும் உணவில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மெக்னீசியம் போன்ற சத்துகள் ஏராளமாக பெருகுகின்றன. இது நம் உடலுக்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடியது ஆகும். குறிப்பாக கீரை மற்றும் பருப்பு உணவுகளை சமைக்க மண்பாண்டத்தை பயன்படுத்தும்போது ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும். மண்பாண்டத்தைப் பயன்படுத்தும் முறைமண்பாண்டத்தைப் பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தும் முன்பு 10 நிமிடமாவது தண்ணீரில் மூழ்க வைத்து எடுத்த பின்னரே சமைக்க வேண்டும். முதன்முதலாக மண்பாண்டம் வாங்குபவர்கள் எடுத்தவுடன் அப்படியே கழுவி சமைத்து விடக்கூடாது.

மண்பாண்டத்தில் இருக்கும் மண்வாசம் போக வேண்டும். சிறுசிறு மண் துகள்கள் அப்படியே உணவில் கலந்து விடக்கூடும். எனவே முதல்முறை மண்பாண்டத்தில் சமைக்கும் முன்னர், சிறிது நேரம் அதனை தண்ணீரில் மூழ்க வைத்து, பின்னர் நன்கு உலர்ந்த பின் சமையல் எண்ணெயை மண்பாண்டத்தின் உள்புறமாக தடவி, நிரம்ப தண்ணீரை ஊற்றி குறைந்த தீயில் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி அப்படியே தண்ணீரை ஆற விடவேண்டும். இதனால் மண்பாண்டம் திடமாக மாறும். அதன்பிறகு சமைக்கும்போது எந்தவிதமான கசிவும் நுண்துளைகள் மூலம் ஏற்படாமல் இருக்கும். மேலும் மண்பாண்டத்தில் இருக்கும் மண் வாசமும் அகலும். அதன்பிறகு சமைக்கப்படும் உணவானது ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் ருசி மிகுந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். அதுபோல மண்பாண்டம் வாங்கி வந்ததும் தண்ணீரில் நனைத்து எடுத்து உலர வைத்து அதில் தினமும் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஊற்றி வைத்திருந்து பின்னர், சமைக்கத் தொடங்கலாம்.இத்தனை நன்மைகளைக் கொண்ட மண்பாண்டங்களை கூடுமானவரை எதற்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அதற்கெல்லாம் பயன்படுத்துவது நலம் தரும்.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்