மகான்களுக்கு ஏன் துன்பம் வருகிறது?

இராமாயணம் எப்பொழுதோ நடந்த ஒரு கதை என்ற அளவில் நாம் நின்று விடுகிறோம். ஆனால் இராமாயணத்தின் ஒவ்வொரு சம்பவங்களிலும் நம்முடைய வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய
எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.நாம் கதையை சுவாரஸ்யமாக அறிவதோடு அதில் உள்ள சம்பவங்களையும், அந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் செய்திகளையும் உள் வாங்கிக்கொண்டு இயன்ற அளவு வாழ்வில் கடைப்பிடித்தால் நம்முடைய வாழ்க்கை மிக உயர்ந்து விடும். சென்ற இதழில் இராமன், தான் காட்டுக்குப் போவதாக கோசலையிடம் சொல்லியவுடன், கோசலை ‘‘அப்படியானால் என்னையும் அழைத்துச் செல். நானும் வருகிறேன்’’ என்று சொல்கிறாள். அப்பொழுது இராமன் ஒரு முக்கியமான நீதியைச் சொல்லுகின்றான்.‘‘அம்மா, தாயாகிய நீயும் என்னோடு வந்துவிட்டால் தந்தையாகிய தசரதன் துன்பப்படுவார். இந்த இக்கட்டான சமயத்தில் நீ தந்தையுடன் இருப்பதும் அவரை சமாதானப்படுத்துவதும் தான் நல்லது. பரதன் வந்து அரசாட்சியை ஏற்றுக் கொண்டவுடன் நீயும் தந்தையும் முறையாக காட்டுக்குச் சென்று தவம் செய்யலாம். அவருடைய தவத்துக்கு உறுதுணையாக இருக்கலாம்.”

இதில் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி என்ன தெரியுமா?
1. மனைவி கணவனுக்கு இக்கட்டான சூழ்நிலையில் துணையாக இருக்க வேண்டும். அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். அவனுடைய துன்பத்தில் பங்கு கொள்ள வேண்டும் அவனை விட்டு விலகக்கூடாது.
2. குடும்ப விஷயங்களாக இருக்கட்டும், இல்லை ராஜாங்க பொறுப்புகளாக இருக்கட்டும், அடுத்தவர்களிடம் அதை முறையாக ஒப்படைத்து விட்டு ஒரு கட்டத்தில் தான் அதிலிருந்து விலகி, தன்னுடைய ஆன்ம வாழ்வுக்கு வழி தேடிக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டையும் தாயாகிய கோசலைக்குச் சொல்லுகின்றான். இப்படி பல நீதிகள் இராமாயணத்தில் இருக்கின்றன. இந்த சம்பவங்களை ஒரு நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அவர் ஒரு கேள்வி கேட்டார்.
‘‘அவன் தெய்வப் புருஷன். அவனுக்கே இத்தனைச் சோதனைகளா? என்று கேட்டபோது அடியேன் அவருக்கு ஒரு விடையைச் சொன்னேன். ‘‘அவதார புருஷர்களாக இருந்தாலும், மகான்களாக இருந்தாலும் இந்த நிஜ உலகத்தில் பிறந்து விட்டால் அவர்களுக்கு சோதனைகளும் துன்பங்களும் இருக்கத்தான் செய்யும்.’’‘‘அப்படியானால் தெய்வ வழிபாட்டால் என்ன பலன்? தெய்வமே அவதார நிலையில் சோதனைகளை எதிர்கொண்டு துன்பப்படும்பொழுது சாதாரண மனிதர்களாகிய நாம் என்ன செய்ய முடியும்?’’அப்போது அவருக்கு விளக்கமாக ஒரு கதையைச் சொன்னேன். அது மகான் ஜெயதேவரின் கதை. ஜெயதேவர் என்றால் பல பேருக்குத் தெரியாது. ஆனால், அஷ்டபதி என்றால் எல்லோருக்கும் தெரியும். கோவிந்த கீதம் என்னும் அஷ்டபதியை இயற்றியவர் அவர்.

பிரேம பாவத்திலே ராதையையும் கண்ணனையும் சதாசர்வகாலமும் நினைத்துக் கொண்டிருந்த மிகச்சிறந்த மகான். அவருடைய வாழ்க்கையிலே ஒரு சம்பவம் நடைபெறுகின்றது. அவர் ஊருக்கு பக்கத்து ஊரில் ஒரு மிகப்பெரிய வணிகர் இருந்தார். பகவன்தாஸ் என்று அவருக்குப் பெயர்.இவருடைய பாடல்கள் எல்லா இடங்களிலும் ஒலிப்பதையும் புகழ்பெற்று இருப்பதையும் அறிந்தவர்.அவர் தன்னுடைய வீட்டுக்கு வர வேண்டும், தனக்கு ஆசீர்வாதம் தர வேண்டும் சில நல்ல வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்’’ என்று அழைக்கின்றார். பொதுவாகவே மகான்கள் யாராவது தங்களிடம் நல்ல வார்த்தைகளை கேட்க விரும்புகின்றேன் என்று சொன்னால் போகாமல் இருக்கமாட்டார்கள். காரணம் சத் விஷயத்தைக் கேட்கிறேன் என்று ஒருவர் வந்து நிற்கும் பொழுது அவருக்கு அதை அவசியம் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள். நல்ல விஷயங்கள் கேட்க வேண்டும் என்ற அக்கறை பட்டு கேட்பவர்களுக்கு சொல்லாமல் இருக்க முடியுமா? ராமானுஜர் உயர்ந்த விஷயங்களை ஆசை உடையோர்க்கு எல்லாம் கூறுங்கள் என்று தானே சொல்லி இருக்கின்றார். இந்த அடிப்படையில் சத் விஷயங்களைக் கேட்க ஆசைப்படும் வணிகருடைய வீட்டுக்கு ஜெயதேவர் செல்கிறார்.

அவன் வணிகனாக இருந்தாலும் பக்தியில் ஆழ்ந்து இருப்பதையும், ஆன்ம நாட்டம் கொண்டிருப்பதையும் அறிந்து மகிழ்கிறார். அவன் விருப்பப்படி சில நாட்கள் அவனோடு தங்குகிறார். அங்கே பல பாடல்களைப் பாடி நல்ல உபதேசங்களை செய்கின்றார். அந்த வணிகருக்கு மகிழ்ச்சி. அவர் ஜெயதேவருக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து ஒரு தேரில் வைத்து அவருடைய ஊரில் விட்டு விட்டு வரும்படி அனுப்புகின்றார். தேர் ஒரு காட்டுப் பகுதியில் செல்லும் பொழுது வித்தியாசமான சப்தங்கள் கேட்கின்றன. விலங்குகள் அங்குமிங்கும் ஓடுகின்றன. தேரோட்டிக்கு விவரம் புரிகிறது. ஆயுதமேந்திய வழிப்பறி கொள்ளையர்கள் வருகிறார்கள் என்பது புரிந்து “சுவாமி ஆபத்து தப்பித்து ஓடுங்கள்” என்று சொல்கிறான். தியானத்தில் இருந்த ஜெயதேவருக்கு எதுவும் விளங்கவில்லை. அதற்குள் வழிப்பறிக் கொள்ளையர்கள் வழிமறிக்கிறார்கள். தேரோட்டி பயந்து ஓடி விடுகின்றான். ஜெயதேவர் எதையாவது எடுத்துக் கொண்டு போகட்டும் என்று நினைத்துக் கொண்டு நிதானமாக இறைவனுடைய பாசுரங்களைப் பாடிக் கொண்டே செல்லும் பொழுது கொள்ளையர்கள் விபரீதமாகச் சிந்திக்கிறார்கள்.

நடந்து செல்லும் இவரை விட்டு விட்டால் இவர் ஊரில் சென்று ஆட்களை அழைத்து வருவார். அதோடு நம்மையும் காட்டிக் கொடுத்து விடுவார் என்று நினைத்து ஓடிப்போய் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.அவருடைய கையையும் காலையும் இரக்கமில்லாமல் வெட்டி அவரை ஒரு பாழும் கிணற்றில் தள்ளி விடுகின்றார்கள். அவர் அந்த நேரத்தில் கூட விடாமல் பகவானுடைய நாமாவைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். வெட்டப்பட்ட கைகளில் இருந்து குருதி ஆறாகப் பெருக ஒரு கட்டத்தில் அவர் சுய நினைவு இழந்து விடுகின்றார். ஆனாலும், அப்பொழுதும் பகவானை பற்றிய நாம சங்கீர்த்தனம் ஒரு முனகலாக தீன ஸ்வரத்தில் அந்த காட்டின் நிசப்தத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.இப்பொழுது அந்த பகுதிக்கு வேட்டையாட வந்த மன்னன் ஏதோ ஒரு மனிதனின் தீனமான முனகல் குரல் கேட்கிறதே என்று தன் ஆட்களை விட்டு தேடச் சொல்ல, அவர்கள் தேடி இந்த பாழ் கிணற்றில் விழுந்து கிடக்கும் ஜெயதேவரை மீட்டெடுக்கிறார்கள்.அரண்மனை வைத்தியரைக் கொண்டு அவருடைய வெட்டப்பட்ட கை கால்களுக்கு வைத்தியம் செய்து குணப்படுத்துகின்றார்கள்.“சுவாமி எப்படி இந்த பாழும் கிணற்றில் விழுந்தீர்கள்? உங்கள் கை கால்களை இப்படிச்சிதைத்து கொடுமைப்படுத்தியது யார்? என்னுடைய நாட்டில் இப்படி ஒரு சாதுவுக்கு தீங்கு செய்வதை பொறுத்துக் கொள்ள மாட்டேன். அவர்களைக் கண்டுபிடித்து மரண தண்டனை தருகிறேன். சுவாமி சொல்லுங்கள். உங்கள் கை கால்களை வெட்டியது யார்?’’மன்னன் இப்படி ஆவேசமாகக் கேட்டதும் ஜெயதேவர் சிரித்தார்.

‘என் கை கால்களை வெட்டியதும், பாழும் கிணற்றில் தள்ளியதும் என் ஊழ் வினை ஆகும்.’’ மேலும் மகான்கள், ஏதோ ஒரு விதத்தில் மக்களின் பாவங்களை ஏற்றுக் கொள்வதாகவும் ஒரு கருத்து உண்டு. ஊழ்வினை என்பது, மிகமிக ஆழமான விஷயமாகும். சற்றே பொறுமையாக, நம் வாழ்க்கையை உற்றுப் பார்த்தால் ஒழிய ஊழ்வினையை புரிந்துக் கொள்ள முடியாது. பாவபுண்ணிய கணக்கு என்பது, மனதை தாண்டிய சூட்சுமம் ஆகும்.

 

Related posts

முத்துசுவாமி தீட்சிதர் காட்டும் ஸ்ரீவித்யா ராஜகோபாலன்

நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?

திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை