மதுரவாயலில் குடோனிலிருந்து ரூ.46 லட்சம் மதிப்பிலான ஆட்டோ மொபைல்ஸ் உதிரிபாகங்கள் திருடிய 2 பேர் சிக்கினர்: மேலும் ஒருவருக்கு போலீஸ் வலை

பூந்தமல்லி: மதுரவாயலில் உள்ள குடோனில் இருந்து ரூ.46 லட்சம் மதிப்பிலான 28 டன் ஆட்டோமொபைல்ஸ் உதிர்பாகங்கள் திருடிய 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். இதில், தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் உதயகுமார்(32), வேலப்பன்சாவடி அடுத்த புளியம்படு பகுதியில் உள்ள தனியார் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் உள்ள ஆட்டோமொபைல் பொருட்களை உதயகுமார் கணக்கெடுத்துள்ளார்.

அப்போது குடோனில் இருந்த 28 டன் எடை கொண்ட இரும்பு ஆட்டோமொபைல்ஸ் உதிரிபாகங்கள், 1 டன் செம்பு ஆட்டோமொபைல்ஸ் உதிரி பாகங்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.46 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் குடோனில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அங்கு பணிபுரியும் அரக்கோணத்தை சேர்ந்த குடோன் பொறுப்பாளர் விமல்குமார்(40), அருப்புக்கோட்டையை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார்(20) என தெரியவந்தது.

இருவரும் சேர்ந்து சிறுக, சிறுக குடோனில் இருந்து ஆட்டோமொபைல்ஸ் உதிரிபாகங்களை திருடிச் சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர். 1 டன் இரும்பு ஆட்டோ மொபைல்ஸ் உதிர் பாகங்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் உதிரி பாகங்களை எடுத்து செல்ல பயன்படுத்திய லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் உதிரி பாகங்களை எடுத்து சென்று எங்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த திருட்டில் உடந்தையாக இருந்த தலைமறைவாக உள்ள மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே சொத்துத் தகராறில் துப்பக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு

கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா?: ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒருவரின் உடல் மீட்பு