மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரம்: வட மாநில ஊழியரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை..!!

மதுரை: மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரத்தில், வட மாநில ஊழியரை பணி நீக்கம் செய்து தனியார் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த விமான நிலையத்தில் பயணம் செய்யும் பயணிகளுடன் அவர்களது உறவினர்கள், அதேபோல் மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளை வரவேற்பதற்காக அவர்களது உறவினர்கள் வாடகை கார் மூலமும், சொந்த கார் மூலமும் வருவது வழக்கம்.

அவர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில், சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளே செல்லும் வாகனங்கள் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களை வருகை பதிவு செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மதுரை விமான நிலைய சுங்கச்சாவடியை வடமாநில நிர்வாகம் ஒன்று டெண்டருக்கு எடுத்துள்ளது. தினசரி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், வாகனங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வதாகவும், அரை மணி நேரத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட ரூ. 20 கட்டணத்திற்கு பதில், ரூ.60 கேட்டு வசூல் செய்ததாகவும் புகார் எழுந்தது. நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகளை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மதுரை விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலித்த பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள செய்தியில், மதுரை விமான நிலையத்தில் விதிமீறலாக வாகன நிறுத்த கட்டண வசூல் செய்யப்பட்ட பிரச்சனை குறித்து விமான நிலைய இயக்குநர் எனக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அளித்துள்ளார்.

அப்பதிலில் “அதிக கட்டணம் குறித்து வணிக மேலாளர் நேரடி விசாரணையை மேற்கொண்டார். விதிமீறிய வாகனநிறுத்த கட்டண வசூல் உறுதி செய்யப்பட்டதால் அப்பணியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தினிடம் இனி இது நிகழக்கூடாது என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது “ என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்