மதுரையில் நடைப்பயிற்சி சென்றபோது நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை: குடும்ப பிரச்னையில் தீர்த்துக்கட்டிய 4 பேர் கைது

மதுரை: நடைப்பயிற்சி சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியை முன்விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி கும்பல் படுகொலை செய்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, செல்லூரை சேர்ந்தவர் பாலன் (எ) பாலசுப்ரமணியன் (47). நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச்செயலாளர். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். மதுரை பீபீ குளம் வல்லபாய் சாலையில் நேற்று காலை 7 மணியளவில் பாலசுப்ரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது இரு டூவீலர்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், பாலசுப்ரமணியனை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.

அதிர்ச்சியடைந்தவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அப்போது அந்தப் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சிலர் ஓடி வந்து ஆயுதங்களுடன் வந்த கும்பலை தடுத்தனர். அவர்களை தள்ளி விட்ட அந்த கும்பல், பாலசுப்ரமணியனை ஓட ஓட துரத்திச் சென்று, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் பாலசுப்ரமணியன் சரிந்து விழுந்து இறந்தார். தகவலறிந்து வந்த தல்லாகுளம் போலீசார், உடலைக் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து கொலையாளிகளை அடையாளம் கண்டறிந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘‘பாலசுப்ரமணியன் மீது ஏற்கனவே ஒரு பெண் உள்பட 3 பேர் கொலை, கொலை முயற்சி வழக்கு என 20 வழக்குகள் உள்ளன. குடும்பப்பிரச்னை காரணமாகவே கொலை நடந்திருக்கலாம் எனத்தெரிகிறது. பாலசுப்ரமணியனின் தம்பி பாண்டியராஜன் குடும்பத்தினருக்கு, உறவினர் மகாலிங்கம் பெண் கொடுத்துள்ளார். அந்த பெண் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இதுதொடர்பாகவும், சொத்து பங்கு பிரிப்பது தொடர்பாகவும் இரு குடும்பத்தினரிடையே பிரச்னை இருந்துள்ளது. இதுதொடர்பாக நடந்த மோதலில் மகாலிங்கம் மீது வழக்கு பதியப்பட்டு கைதாகியுள்ளார்.

இந்த பிரச்னையில் தம்பி பாண்டியராஜனுக்கு ஆதரவாக பாலசுப்ரமணியன், மகாலிங்கம் குடும்பத்தினரை அழைத்து கண்டித்துள்ளார். தொடர்ந்து அவர் மிரட்டி வந்ததால் மகாலிங்கம் தரப்பினர் திட்டமிட்டு பாலசுப்ரமணியனை கொன்றிருப்பதாக தெரிகிறது’’ என்றனர். இதையடுத்து திருமண உறவு மற்றும் சொத்து பிரச்னை காரணமாக கொன்ற மதுரையை சேர்ந்த பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி ஆகிய 4 பேரை நேற்று மாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வெட்டி கொல்லப்பட்ட பாலசுப்ரமணியன் மீது ஏற்கனவே ஒரு பெண் உள்பட 3 பேர் கொலை, கொலை முயற்சி வழக்கு என 20 வழக்குகள் உள்ளன.

* பஸ் ஸ்டாப்பில் தூங்கிய தம்பதி வெட்டி கொலை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கோவில்பட்டியை சேர்ந்தவர் அழகன்(60). மனைவி பாப்பு என்ற பாப்பம்மாள்(58). இவர்கள் ஊர் ஊராக சென்று தென்னங்கீற்று விளக்குமாறு விற்பனை செய்து வந்தனர். இவற்றை மொத்தமாக கொள்முதல் செய்து சென்னைக்கு அனுப்பும் தொழிலும் செய்து வந்தனர். கடந்த 11ம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டம்பட்டி பகுதியில் விளக்குமாறு விற்றனர். விற்பனையை முடித்துவிட்டு அன்று இரவு கச்சிராயன்பட்டி பஸ் ஸ்டாப்பில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்மகும்பல் திடீரென தம்பதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பாப்பம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அழகன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அழகன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related posts

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்!

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு: இந்தியா’ கூட்டணி போராட்டம்: பேருந்துகள் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்