மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை வைபவம் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: 15 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண தரிசனம் செய்தனர். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று துவங்கி தினமும் மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 19ம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், மறுநாள் திக்கு விஜயம் நடந்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிவான மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை வெகு சிறப்பாக நடந்தது. திருக்கல்யாணத்திற்காக கோயில் வளாகத்திற்குள் வடக்கு – மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் ரூ.30 லட்சம் செலவில், 10 டன் எடையுள்ள பல வண்ண பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப் பட்டிருந்தது.

முருகப்பெருமான் தெய்வானையுடன், தங்கை மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய்ப் பெருமாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவே புறப்பட்டு மீனாட்சியம்மன் கோயில் வந்திருந்தனர். நேற்று அதிகாலை தங்கக்கவசத்துடன், சிவப்பு நிற பட்டுச்சேலை அணிவித்து, வைரக்கிரீடம் சூடி, மாணிக்க மூக்குத்தி, வைரமாலை, தங்க அங்கி, ஒட்டியாணம் அணிவிக்கப்பட்டு மணப்பெண் அலங்காரத்தில் மீனாட்சியம்மன் ஜொலித்தார். இதேபோல், சுந்தரேஸ்வரருக்கு வெண்பட்டு, பிரியாவிடைக்கு பச்சைப்பட்டு அணிவிக்கப்பட்டிருந்தது.

திருக்கல்யாணத்திற்கு முன்னதாக, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து சுந்தரேஸ்வரர் காசி யாத்திரை செல்லும் நிகழ்வு நடத்தப்பட்டு, அம்மனும் சுந்தரேஸ்வரரும் கோயிலுக்குள் வந்து கன்னி ஊஞ்சல் ஆடினர். மேலக்கோபுர வாசலில் மாப்பிள்ளையான சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை நடத்தப்பட்டு, பின்னர் அவர் மணமேடையில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து மேடைக்கு மீனாட்சியம்மன் மணக்கோலத்தில் அழைத்து வரப்பட்டு, மணமகளின் இடதுபுறம் பவளக்கனிவாய்ப் பெருமாள், வலப்புறம் தெய்வானையுடன் முருகப்பெருமானும் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.

காலை 7.45 மணிக்கு விநாயகர் பூஜையுடன் திருமணச் சடங்குகள் தொடங்கின. மேடையின் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, முதலில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுமங்கலி பூஜையும் நடத்தப்பட்டது. வெண்பட்டினாலான பரிவட்டம் சுந்தரேஸ்வரருக்கும், பச்சை பட்டுப்புடவையால் ஆன பரிவட்டம் அம்மனுக்கும் கட்டப்பட்டன. பவளக்கனிவாய்ப் பெருமாள் தன் தங்கை மீனாட்சியை, சுந்தரேஸ்வரருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் நிகழ்வும் நடந்தது. தொடர்ந்து சுந்தரேஸ்வரராக செந்தில் பட்டர், மீனாட்சியாக ஹலாஸ் பட்டர் மாலை மாற்றிக் கொண்டனர்.

பின் இருவரும் மும்முறை வைரக்கற்கள் பதித்த தங்கத் தாலியை பக்தர்கள் முன்பு எடுத்துக் காட்ட, காலை 8.51 மணியளவில் மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க மீனாட்சியம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியிலும், கோயில் வளாகத்திலும் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திருமணக் கோலத்தில் இருந்த சுவாமி – அம்மனை தரிசித்து வணங்கியதுடன், பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டனர். ஏராளமான பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டனர்.

தொடர்ந்து, சுந்தரேஸ்வரருக்கும், அம்மனுக்கும் தங்கக் கும்பாவில் சந்தனம், தங்கச் செம்பில் பன்னீர் தெளிக்கப்பட்டன. தங்கத் தட்டில் கற்பூரம் வைத்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மணமக்கள் தங்க அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் சமயச் சடங்கு நிகழ்வும் நடத்தப்பட்டது. திருக்கல்யாணம் முடிந்ததும், மேடையில் மணமக்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் கோயிலுக்குள் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபம் வந்தனர். அவர்களுடன் திருப்பரங்குன்றம் முருகன் – தெய்வானை, பவளக்கனிவாய்ப் பெருமாளும் வந்தனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சியை காண ரூ.500, ரூ.200 டிக்கெட் வாங்கியவர்கள் 13 ஆயிரம் பேர் வடக்கு கோபுர வாசல் வழியாகவும், முன்னுரிமை அடிப்படையில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் தெற்கு கோபுர வாசல் வழியாக இலவசமாகவும் அனுமதிக்கப்பட்டனர். மணமகள் கோலத்தில் மீனாட்சியம்மன் அனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும், மணமகன் சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும் எழுந்தருளி நேற்று மாலை கோயிலைச் சுற்றிய மாசி வீதிகளில் உலா வந்தனர். வலம் வந்த சுவாமி – அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* இன்று தேரோட்டம்
சித்திரைத் திருவிழாவில் இன்று (ஏப். 22) தேரோட்டம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர். அதிகாலை 5.45 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்குகிறது.

* மலையில் இருந்து புறப்பட்ட அழகர்
அழகர்மலையில் இருந்து அழகர் மதுரைக்கு புறப்பட்டார். இன்று (ஏப். 22) மூன்று மாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அதிகாலையில் வைகையாற்றில் இறங்குகிறார். அழகர் ஆற்றில் இறங்க வசதியாக வைகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை சார்பில் ஆழ்வார்புரம் பகுதியில் வைகையாற்றில் அழகர் ஆற்றில் இறங்குமிடத்தில் பந்தல் அமைத்து, கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* டிஜிட்டல் மொய்
மீனாட்சி திருக்கல்யாணத்தையொட்டி, நான்கு கோபுர வாசல்களிலும் கோயில் நிர்வாகம் சார்பில் மொய்ப்பணமாக, ரூ.50 மற்றும் ரூ.100 என வசூலிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மொய்ப்பணம் எழுதினர். இதுபோக 4 கோபுர வாசல்களில் டிஜிட்டல் முறையில் மொய் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் மொய் செலுத்தி விட்டு, அதன் ரசீதை காண்பித்து, அருகில் உள்ள மொய் எழுதும் இடத்தில் பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

* லட்சம் பேருக்கு கல்யாண விருந்து
திருக்கல்யாணத்தையொட்டி தனியார் அமைப்புகள் மூலம் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தடபுடலான விருந்து சுமார் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், பட்டாணி குருமா, பஜ்ஜி, ஸ்வீட் போண்டா, உருளைக்கிழங்கு வறுவல், அப்பளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பிரசாத பொட்டலங்களும் வழங்கப்பட்டன. மீனாட்சி கோயில் பகுதிகளிலும், சுற்றிய தெருக்களிலும் ஏராளமானோர் அன்னதானம் செய்தனர். சித்திரை வீதி, மாசி வீதிகள் மற்றும் கோயிலை சுற்றியுள்ள இடங்களில் புளியோதரை, பொங்கல், நீர் மோர் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Related posts

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!