மாஸ் வருமானம் தரும் மதுரை-1 குதிரைவாலி!

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நடராஜ். நெல், மஞ்சள், காய்கறிப் பயிர்கள் என பரவலாக விவசாயத்தைச் செய்துவந்த இவர் கடந்த இரண்டு வருடங்களாக சிறுதானியம் பக்கம் திரும்பி இருக்கிறார். சிறுதானியம் பயிரிட்டால் அரசு மானியம் மற்றும் வேளாண் சலுகைகள் கூடுதலாக கிடைக்கும். அதேசமயம் சிறுதானிய விளைபொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும் என வேளாண் அதிகாரிகள் கூறிய அறிவுரையைக் கேட்ட நடராஜ் தனது விவசாய நிலத்தில் ஒரு பகுதியை சிறுதானியத்திற்கென்றே ஒதுக்கி இருக்கிறார். அதாவது தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரில் தற்போது குதிரைவாலி பயிரிட்டு அறுவடை செய்துகொண்டிருக்கிறார். ஒரு காலை வேளையில் நடராஜைச் சந்தித்தோம்.

“எங்கள் ஊரில் எப்போதும் தொடர்ச்சியாக விவசாயம் நடந்தபடி இருக்கும். எங்கள் அப்பா காலத்தில் இருந்தே எங்களுக்கு விவசாயம்தான் தொழில் என்பதால் சிறுவயதில் இருந்தே எனக்கு விவசாய வேலைகள் அனைத்தும் தெரியும். அப்பாவோடு விவசாயம் செய்துவந்தது போக கடந்த 10 வருடங்களாக நானே முழுநேர விவசாயியாக மாறி இருக்கிறேன். மற்ற விவசாயிகளைப் போலவே நெல், சோளம் போன்ற பயிர்களையே சாகுபடி செய்து வந்தேன். வேளாண் அதிகாரிகளின் அறிவுரைப்படி கடந்த இரண்டு வருடங்களாக குதிரைவாலி பயிரிட்டு வேளாண் அலுவலகத்திற்கே விதைக்காக கொடுத்து வருகிறேன்.

மதுரை-1 என்கிற நாட்டு ரக குதிரைவாலி விதைகளை ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வீதம் வாங்கி நாற்றங்கால் முறையில் நாற்று பாவித்து அதன்பின் நாற்று நடத் தொடங்கினேன். ஒரு ஏக்கருக்கு மூன்று கிலோ விதைகள் போதுமானது. மயில், குருவிகள் தொல்லையால் விதைகள் சேதாரம் ஆகும் என்பதால் 5 கிலோ விதைகளில் நாற்று பாவினேன். நடவு செய்வதற்கு முன்பாக நிலத்தை நன்றாக இரண்டு முறை உழ வேண்டும். முதல் உழவில் ஏக்கருக்கு எட்டு டன் தொழு உரத்தைக் கொட்டி உழ வேண்டும். அதன்பின், மண்ணைக் காயப்போட்டு அடுத்த உழவு செய்ய வேண்டும். நாற்றங்காலில் விதை விதைத்து நாற்று வளர்ந்து வருவதற்கு 25 நாட்கள் ஆகும். அதற்குள் நடவு செய்வதற்கு தேர்ந்தெடுத்த நிலத்தை இந்த முறையில் தயார் செய்ய வேண்டும். நடவின்போது நிலத்தில் நன்றாக தண்ணீர்விட்டு ஒன்றுக்கு ஒன்று என்ற இடைவெளியில் நாற்றுகள் நடத் தொடங்கலாம். ஒரு நடவில் மூன்று நாற்றுகள் வரை வைத்து நடவு செய்யலாம். அதைத்தொடர்ந்து நடவு முடிந்து மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். குதிரைவாலியைப் பொறுத்தவரை உயிர் தண்ணீருக்கு பிறகு வாரம் ஒருமுறை நீர் கொடுத்தாலே போதுமானது. ரொம்பவும் மண்ணை காயவிடாமலும் அதேசமயம் அதிக ஈரமாகவும் மண்ணை ஆக்காமல் வயலுக்கு நீர் கொடுக்க வேண்டும். நடவு செய்து சரியாக 25வது நாளில் முதல் களை பறிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து மகசூல் பெருக்கத்திற்காகவோ அல்லது வளர்ச்சிக்காகவோ வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கும் உரங்களை கொடுப்பேன்.

குதிரைவாலி 100 நாள் பயிர். ஐந்து நாட்கள் முன்னும் பின்னுமாக அறுவடைக்காக காத்திருந்து அறுவடை செய்யலாம். இந்த முறை அறுவடை செய்யும்போது எனக்கு சரியாக 1050 கிலோ அதாவது ஒரு டன்னுக்கும் மேல் குதிரைவாலி மகசூலாக கிடைத்தது. இது குறைவான அளவாக இருந்தாலும் சிறுதானிய பயிர் என்று பார்த்தோமானால் இது சரியான மகசூல்தான். இந்த குதிரைவாலியை வேளாண் அலுவலகத்திற்கே விதைக்காக கொடுத்துவிட்டேன். தற்போதைய நிலவரப்படி வெளியே இதனை விற்றால் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை ஆகும். ஆனால், விதைக்காக இவர்களிடம் கொடுக்கும்போது கூடுதலாக ரூ.20 சேர்த்து ரூ.70க்கு விற்பனை செய்தேன். இதனால் மொத்தமாக எனக்கு ரூ.73,500 வருமானமாக கிடைத்தது. இதில் செலவு எனப் பார்த்தால் உழவு, உரம், கூலி என ஒரு அறுவடைக்கு ரூ.20,000 வரை செலவு ஆகும். அதுபோக ரூ.53,500 லாபமாக கிடைத்தது. சிறுதானியத்தில் இந்தளவு லாபம் காண்பதே என்னளவில் பெரிய விசயம். அந்த வகையில் இந்த விவசாயம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என புன்னகையோடு பேசி முடிக்கிறார் நடராஜ்.
தொடர்புக்கு:
நடராஜ்: 93858 94135.

விதை நேர்த்தி
நாற்றை நடவு செய்வதற்கு முன்பாக நாற்றங்காலில் இருந்து எடுக்கப்பட்ட நாற்றை விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதாவது, அரிசி வடித்த தண்ணீருடன் ஒரு கிலோ சூடோமோனஸ் சேர்த்து, அந்த நீரில் நாற்றின் வேர்ப் பகுதியை விட்டு எடுத்து நடவு செய்தால் நாற்றுக்குத் தேவையான வேர்ச்சத்து கிடைக்கும். இதனால் அதன் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

 

Related posts

ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள் போர்நிறுத்த முன்மொழிவை ஏற்க முடியாது: நட்பு நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பதில்

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை