மதுரையில் எடப்பாடி தலைமையில் மாநாடு நடக்கும் நேரத்தில் சென்னையில் நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை: கொடநாடு, முன்னாள் அமைச்சர்களின் ஊழல் விவரங்களை வெளியிட முடிவு

சென்னை: மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாடு நடைபெறும் வருகிற 20ம் தேதி, சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அறிவித்துள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் பலரின் ஊழல்கள், கொடநாடு உள்ளிட்ட முக்கிய விவரங்களை வெளியிட ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை நிரூபிக்கவும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் வருகிற 20ம் தேதி (ஞாயிறு) மதுரையில் அதிமுக சார்பில் மிகப்பெரிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். மதுரை மாநாட்டில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு செய்த துரோகத்தை பற்றி பேச எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.

இதை தடுக்க ஓபிஎஸ் அணியினர் தற்போது புதிய வியூகம் வகுத்துள்ளனர். எடப்பாடி தலைமையில் மதுரையில் மாநாடு நடைபெறும் அதேநாள், அதே நேரம் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆலோசனை கூட்டம் முடிந்ததும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து முன்னாள் அதிமுக அமைச்சர்களும் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும், தொண்டர்களுக்கும் செய்த துரோகம், அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவர்கள் செய்த ஊழல் குறித்தும் பட்டியல் வெளியிட முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. ஆடிட்டோரியத்தில் வருகிற 20ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்தும் அதே நாள் மற்றும் அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவது தமிழகத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் வருகிற 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, கொடநாடு பங்களா கொலை, கொள்ளை மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பற்றிய பல உண்மைகளை வெளியிட திட்டமிட்டுள்ளது பொதுமக்களிடமும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!