மதுரை மாநாடு வெற்றி புளியோதரை தோல்வி: மாஜி அமைச்சர் புது விளக்கம்

மதுரை: மதுரை மாநாட்டில் உணவு மீதமான விவகாரத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதுமையான விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் சரியாக வேகாததாலும், அடி பிடித்து போனதாலும் வீணான டன் கணக்கிலான உணவு மற்றும் காய்கறிகள் மலை போல கொட்டப்பட்டிருந்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி என்ன புரட்சி செய்தார் என்று கேட்கிறார்கள். அவர் மக்கள் நலத்திட்டங்களை நினைத்துப் பார்த்தால், அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் குறித்து புரியும்.

வாகன நிறுத்துமிடம், சுகாதாரமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவது துவங்கி ஒவ்வொரு விஷயத்திலும் எடப்பாடி சிறப்பு கவனம் செலுத்தியதால்தான் மாநாடு வெற்றி பெற்றுள்ளது. 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. ஆனால் பாத்திரம் எடுத்துச் செல்லும்போது கொஞ்சம் மிச்சம் இருந்தது. சிதறி கிடந்த சிலவற்றை எடுத்துக்காட்டி மிகைப்படுத்துவது வேதனையாக உள்ளது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் கிலோ அரிசியில் உணவு தயார் செய்யப்பட்டது. மாநாடு வெற்றியை குறை சொல்வதற்கு எந்த விஷயம் கிடைக்கவில்லை. அதனால் புளியோதரை தோல்வியை பேசுகின்றனர்.

மாநாட்டில் 750 அடுப்பில் உணவு தயாரிக்கப்பட்டது. அதில் ஒரு அடுப்பில் தொண்டர்கள் அளவுக்கு அதிகமாக வந்த காரணத்தினால், அவசரமாக சரியாக வேகாமல் கொடுத்திருக்கலாம். விசாரணை செய்து வருகிறோம். நீட் ஒழிப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. இனிமேல் டி.டி.வி.தினகரன் தென்மாவட்டத்திற்கு வர முடியுமா என்றார்.. எடப்பாடி வந்து விட்டார். ஆனால் அவர்களைக் காணோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி: ஐகோர்ட் தீர்ப்பு

புதுச்சேரியில் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமிக்கு அதிமுக செயலாளர் அன்பழகன் கோரிக்கை

ஒசூர், சிப்காட் காவல்நிலைய எல்லை பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் 171 சிசிடிவி கேமராக்கள் அமைப்பு: மாவட்ட எஸ்பி தொடக்கி வைத்தார்