மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை வைபவம் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: 12 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு; மாசி வீதிகளில் இன்று தேரோட்டம்

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை வெகு விமர்சையாக நடந்தது. இதற்காக கோயில் வளாகத்திற்குள் வடக்கு – மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் ரூ.25 லட்சம் செலவில், 4 ஆயிரம் கிலோ எடையுள்ள பல வண்ண பூக்களால் மண மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை தங்கக்கவசத்துடன், சிவப்பு நிற பட்டுச்சேலை அணிவித்து, வைரக்கிரீடம் சூடி, மாணிக்க மூக்குத்தி, வைரமாலை, தங்க அங்கி, ஒட்டியாணம் அணிவிக்கப்பட்டு மணப்பெண் அலங்காரத்தில் மீனாட்சியம்மன் ஜொலித்தார். இதேபோல், சுந்தரேஸ்வருக்கு வெண்பட்டு, பிரியாவிடைக்கு பச்சைப்பட்டு அணிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து சுந்தரேஸ்வரர் காசி யாத்திரை செல்லும் நிகழ்வு நடத்தப்பட்டு, அம்மனும் சுந்தரேஸ்வரரும் கோயிலுக்குள் வந்து கன்னி ஊஞ்சல் ஆடினர். மேலக்கோபுர வாசலில் மாப்பிள்ளை சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை நடத்தப்பட்டு மணமேடையில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து மேடைக்கு மீனாட்சி அம்மன் அழைத்து வரப்பட்டு, மணமகளின் இடதுபுறம் பவளக்கனிவாய்ப் பெருமாள், வலப்புறம் தெய்வானையுடன் முருகப்பெருமானும் அமர வைக்கப்பட்டனர். காலை 8.15 மணிக்கு விநாயகர் பூஜையுடன் திருமணச் சடங்குகள் தொடங்கின. மேடையின் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, முதலில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுமங்கலி பூஜையும் நடந்தது. வெண்பட்டாலான பரிவட்டம் சுந்தரேஸ்வரருக்கும், பச்சை பட்டுப்புடவை பரிவட்டம் அம்மனுக்கும் கட்டப்பட்டன. பவளக்கனிவாய்ப் பெருமாள் தன் தங்கை மீனாட்சியை, சுந்தரேஸ்வரருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் நிகழ்வும் நடந்தது.

தொடர்ந்து சுந்தரேஸ்வரராக பிரபு பட்டர், மீனாட்சியாக கார்த்திக் பட்டர் மாலை மாற்றிக் கொண்டனர். பின் இருவரும் மும்முறை வைரக்கற்கள் பதித்த தங்கத் தாலியை பக்தர்கள் முன்பு எடுத்துக் காட்ட, காலை 8.40 மணியளவில் மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க மீனாட்சியம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் சுவாமி – அம்மனை வணங்கியதுடன், ஏராளமான பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டனர். தொடர்ச்சியாக, சுந்தரேஸ்வரருக்கும், அம்மனுக்கும் தங்கக் கும்பாவில் சந்தனம், தங்கச் செம்பில் பன்னீர் கொண்டு வந்து தெளிக்கப்பட்டன. தங்கத் தட்டில் கற்பூரம் வைத்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மணமக்கள் தங்க அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் சமயச் சடங்கும் நடந்தது. திருக்கல்யாணம் முடிந்ததும், மேடையில் மணமக்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பிறகு கோயிலுக்குள் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபம் வந்தனர். அவர்களுடன் திருப்பரங்குன்றம் முருகன் – தெய்வானை, பவளக்கனிவாய்ப் பெருமாளும் வந்தனர். மீனாட்சி திருக்கல்யாணத்தையொட்டி, நான்கு கோபுர வாசல்களிலும் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.50 மற்றும் ரூ.100 என மொய்ப்பணம் வசூலிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மொய்ப்பணம் எழுதினர். ரூ,500, ரூ.200 டிக்கெட் வாங்கியவர்கள் 10 ஆயிரம் பேர் வடக்கு கோபுர வாசல் வழியாகவும், முன்னுரிமை அடிப்படையில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் இலவசமாக தெற்கு கோபுர வாசல் வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். சித்திரைத் திருவிழாவில் இன்று (மே 3) தேரோட்டம் நடக்கிறது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு