மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்க சப்பரத்தில் உலா

மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவில் நேற்று நடந்த சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்க சப்பரத்தில் எழுந்தருளினர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் நாளான நேற்று சுவாமி, பிரியாவிடை, அம்மன் தங்கச் சப்பரத்தில் மாசி வீதிகளில் காலை 7.30 மணியளவில் வலம் வந்தனர்.

பின்னர் கோயிலில் உள்ள சிவகங்கை ராஜா மண்டகப்படியில் எழுந்தருளினர். மாலை 6 மணிக்கு யானை மகால் முன்பு திருஞான சம்பந்தப் பெருமான் சைவ சமயத்தை நிலை நாட்டிய வரலாறு, சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நடந்தது. ஞானசம்பந்தர், சமணர்களுடன் வாதிட்டு வென்ற நிகழ்ச்சி இதில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு, பாடல்கள் பாடி லீலை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு சுவாமி, பிரியாவிடை தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வந்தனர்.

விழாவின் 7ம் நாளான இன்று காலை 8 மணிக்கு தங்கசப்பரத்தில் அம்மன், சுவாமி மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். இரவு 7 மணிக்கு மேல் பிரதோஷ வழிபாட்டை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சுவாமி அதிகார நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகின்றனர்.

Related posts

பக்த விஜயம்

கோணிப்பையை அனுப்பிய அபிராமி!

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்