மதுரை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 1,500 கனஅடி தண்ணீர் திறப்பு

ஆண்டிபட்டி: மதுரை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் இன்று காலை திறந்துவிடப்பட்டுளது. அணையில் இருந்து கடந்த 15 நாட்களில் 2,466 மில்லியன் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு இந்த அணை ஆதாரமாக உள்ளது.

கடந்த மாதம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், வைகை அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசன பகுதிக்கு, அணையில் இருந்து பாசனக் கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், வைகை அணையில் போதிய தண்ணீர் இருப்பு இருப்பதால், அணையின் பூர்வீக பாசனப் பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று வைகையின் பூர்வீக பாசனமான 1,2,3 பகுதிகளுக்கு அணையில் இருந்து 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்பேரில், வைகை பூர்வீக பாசன பகுதி 3ல் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த மாதம் 23ம் தேதி முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து பூர்வீக பாசன பகுதி 2ல் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு கடந்த 1ம் தேதி முதல் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில், பூர்வீக பாசன பகுதி 3ல் உள்ள மதுரை மாவட்டத்திற்கு இன்று காலை 6 மணி முதல் வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.

இன்று முதல் 3 நாட்களுக்கு அணையில் இருந்து மொத்தம் 343 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன்படி முதல் 2 நாட்களுக்கு 1500 கனஅடியும், 3வது நாளில் 970 கனஅடியும் திறக்கப்படும். அணையில் இருந்து கடந்த மாதம் 23ம் தேதி முதல் தற்போது வரை 2,466 மில்லியன் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தொடந்து தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!